இயற்கைப் பேரிடர் நிலை! மாவட்ட செயலாளர்களுக்கு ஜனாதிபதி ரணிலின் அவசர உத்தரவு
இயற்கைப் பேரிடர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு தேவையான ஏற்பாடுகளை செய்யுமாறு அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பேரில், அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் இது குறித்து ஜனாதிபதியின் செயலாளரினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன
பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள அனர்த்த முகாமைத்துவ நிலையம், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்பு பிரிவுகள் மற்றும் பிரதேச செயலக மட்டத்தில் உள்ள நிவாரண சேவை அதிகாரிகளுக்கு தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
அவசரகால சூழ்நிலைகளைத் தவிர்ப்பதற்கும், மக்களின் வாழ்க்கையைப் பராமரிப்பதற்கும் தேவையான நடவடிக்கைகள் குறித்தும், அவசரநிலை ஏற்பட்டால் எடுக்க வேண்டிய அவசர நடவடிக்கைகள் குறித்தும் அனைத்து துறை அமைச்சகங்களுக்கும் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
உடன் அழையுங்கள்
மேலும், இயற்கை பேரிடர் குறித்து 117 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு உடன் தொடர்பு கொள்ளுமாறும், 24 மணித்தியாலங்களும் அறிவிக்க முடியும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அனர்த்தத்தினால் பாதிக்கப்படும் மக்களுக்கு உணவு உள்ளிட்ட இதர வசதிகளை செய்து கொடுக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.