தேசிய நல்லிணக்கமொன்றை உருவாக்க நீண்டகால செயற்பாட்டுப் பொறிமுறை தேவை: அலிசப்ரி
தேசிய நல்லிணக்கமொன்றை உருவாக்குவது தொடர்பில் நீண்டகால செயற்பாட்டுப் பொறிமுறையொன்று தேவைப்படுவதாக அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
தென்னிலங்கை ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும் போதே வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அலிசப்ரி இதனைத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் அலி சப்ரி,
தேசிய நல்லிணக்கம்
தேசிய நல்லிணக்கம் தொடர்பில் இலங்கை தற்போது நீண்ட கால தீர்வுகளை தேடிக் கொண்டிருக்கின்றது.
இந்நாட்டின் அரசியலமைப்புக்கு உட்பட்டதாக உண்மைகளைக் கண்டறியும் பொறிமுறையொன்று உருவாக்கப்பட வேண்டும்.
அது வெளிப்படைத் தன்மை கொண்டதாகவும், அனைத்து சமூகங்களாலும் ஏற்றுக் கொள்ளப்படக் கூடியதாகவும் இருக்க வேண்டும்.
சர்வதேச நாணய நிதியம்
அதே போன்று சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகள் குறித்து பலரும் விமர்சனம் தெரிவிக்கின்றார்கள்.
ஆனால் அவர்கள் அந்த நிபந்தனைகளை விதிக்க முன்னதாக அதனை நாமே மேற்கொண்டிருக்க வேண்டும்.
ஏனெனில் இலங்கையை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்பதற்கு அவை அத்தியாவசியமான விடயங்களாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.