நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நாமல்! பிறப்பிக்கப்பட்ட உத்தரவு
புதிய இணைப்பு
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மீதான எயார்பஸ் விமான கொள்வனவு மற்றும் நிதிமோசடி தொடர்பான வழக்கு விசாரணையை நிறைவு செய்வதாக கோட்டை நீதவான் பசன் அமரசேன இன்று (18) உத்தரவிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸுக்காக எயார்பஸ் விமானங்களை வாங்கியபோது நிகழ்ந்ததாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் மற்றும் பணச்சலவை சம்பவம் தொடர்பாக, நாமல் ராஜபக்ச மற்றும் மூன்று சந்தேகநபர்களுக்கு எதிராக கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் வெளியிட்ட தகவல்
சம்பவம் தொடர்பான அறிக்கையும், ஆவணங்களும் ஏற்கனவே கொழும்பு நிரந்தர மூன்று நீதிபதிகள் கொண்ட மேல் நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான உண்மைகளை நீதிமன்றத்தில் சமர்ப்பித்த குற்றப் புலனாய்வுத் திணைக்களம், இலஞ்ச ஆணைக்குழு ஏற்கனவே கொழும்பு நிரந்தர மூன்று நீதிபதிகள் கொண்ட மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்துவிட்டதால், இவ்வழக்கை இந்த நீதிமன்றத்திலேயே முடிவுக்கு கொண்டுவருமாறு கோரியுள்ளது.

இந்த சம்பவத்தில் முதல் சந்தேகநபரான கபில சந்திரசேன ஏற்கனவே இறந்துவிட்டதாகவும், அவரது பிரேதப் பரிசோதனை அறிக்கை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு இன்னும் கிடைக்கவில்லை என்றும் புலனாய்வு அதிகாரிகள் நீதிமன்றத்தில் மேலும் தெரிவித்துள்ளனர்.
வழக்கின் ஏனைய சந்தேகநபர்களான பிரியங்கா நியோமாலி மற்றும் ஷமிந்திர ராஜபக்ச ஆகிய இரண்டு சந்தேகநபர்களுக்கு எதிராக திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் மன்றில் தெரிவித்துள்ளனர்.
நாளை வரை விளக்கமறியல்
சம்பவத்தில் நான்காவது சந்தேகநபரான நாமல் ராஜபக்ச, இலஞ்ச ஆணைக்குழுவால் நடத்தப்படும் ஒரு விசாரணை தொடர்பில் கொழும்பு நிரந்தர மூன்று நீதிபதிகள் கொண்ட மேல் நீதிமன்றத்தால் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதாகவும், அவரை நாளை (19) வரை சிறைக்காவலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் புலனாய்வு அதிகாரி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளர்.
அதன்படி, வழக்கை இந்த நீதிமன்றத்திலேயே முடித்து வைக்குமாறு புலனாய்வு அதிகாரிகள் நீதிமன்றத்தை கேட்டுக்கொண்டுள்ளனர்.
நீதிமன்ற உத்தரவின் பேரில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச சிறைச்சாலை அதிகாரிகளால் இன்று நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டதுடன், அவர் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இன்று காலை (18) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
வழக்கு விசாரணைக்காக சிறைச்சாலை அதிகாரிகளால் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.