நல்லூரில் வரலாறு காணாத மக்கள் வெள்ளம் (Video)
அழகிய முருகன், அலங்கார வடிவில், தமிழ் கடவுளாக, தமிழர்கள் வாழும் வட பகுதியில், நல்லூரானாக குடிகொண்ட இடம்தான் நல்லூர் கந்தசாமி திருக்கோவில். இந்தத் திருக்கோவில் சரித்திர பிரசித்தி பெற்ற ஒரு புண்ணிய ஸ்தலம்.
முருக அடியார்கள் பலரின் வேண்டுதல்கள் நிறைவேற்றப்பட்ட அற்புத திருத்தலமும் ஆகும். வடபகுதியில் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் முக்கியமானது இந்த நல்லூரான் திருப்பதி.
முருகனின் ஆறுபடை வீட்டுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் இலங்கையிலுள்ள நல்லூர் கந்தனுக்கும், கதிர்காமக் கந்தனுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது.
வேல் மூலவராகத் திகழும் திருத்தலம், ஆறுமுக நாவலரின் மனம் கவர்ந்த கோவில் என பல்வேறு சிறப்புகள் கொண்ட தலமாக விளங்கும் நல்லூர் கந்தன் ஆலய மகோற்சவம் சிறப்பாக இடம்பெற்று வருகிறது.
தமிழர்களின் தனித்துவத்தையும் கலாசாரப் பண்பாட்டு விழுமியங்களையும் உலக மக்களுக்கு உரத்துரைக்கும் ஒரு விழாவாகவே நல்லூர்க் கந்தன் ஆலய திருவிழா நோக்கப்படுகிறது.
அந்த வகையில் நல்லூர் கந்தனின் மகோற்சவ பெருவிழாவின் 24ஆம் திருவிழாவான இன்றைய தினம் தேர்த்திருவிழா இடம்பெறுகிறது.
நல்லூரானின் அழகை கண்டு மெய்சிலிர்க்கவும், அருள்மழையில் நனையவும் இலங்கையின் பல பகுதிகளை சேர்ந்த மக்கள் குறிப்பாக வெளிநாட்டவர்களும் நல்லூரிற்கு படையெடுத்துள்ளனர்.