மத்திய வங்கியின் ஆளுநர், ரணிலின் ஊது குழலாக செயற்படுகிறார்: குற்றம் சுமத்தும் தேசிய மக்கள் சக்தி
மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை திருப்திப்படுத்துவதற்காக பொருளாதாரம் தொடர்பில் சில அறிக்கைகளை வெளியிடுவதாக தேசிய மக்கள் சக்தியின் அரசியல் சபை உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்தநிலையில் மத்திய வங்கி ஆளுநர் ஒரு கலாநிதி மற்றும் துறைசார் நிபுணர் என்ற வகையில் அரசியல்வாதிகள் விரும்பும் வகையில் அறிக்கைகளை வெளியிடுவதை தவிர்க்க வேண்டும் என அவர் செய்தியாளர் சந்திப்பின்போது கோரிக்கை விடுத்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கை
சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கையின் கீழ் தற்போது நடைமுறையில் உள்ள சீர்திருத்த நிகழ்ச்சி நிரலில் இருந்து நாடு விலகினால் பின்விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என நந்தலால் வீரசிங்க தெரிவித்த கருத்து தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே ஜயதிஸ்ஸ இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
கடந்த காலங்களிலும் இதேபோன்ற மத்திய வங்கி ஆளுநர்கள் இருந்ததாக குறிப்பிட்ட ஜயதிஸ்ஸ, பொருளாதார திவால் நிலைமை தொடர்பில் உயர் நீதிமன்றத்தினால் ஆளுனர் ஒருவர் தண்டிக்கப்பட்டதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.