மன்னாரில் மர்ம நபர்கள் கொள்ளை: போதகர் வழங்கிய வாக்குமூலம் (Video)
மன்னார்- மடு 2ஆம் கட்டை பகுதியில் தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த கிறிஸ்தவ போதகரை இடைமறித்து கொள்ளை சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் நேற்று(26.06.2023) இரவு பதிவாகியுள்ளது. இச்சம்பவம் குறித்து போதகர் மேலும் தெரிவிக்கையில்,
இரவு ஆராதனையை முடித்துவிட்டு நானும் எனது மனைவியும் வீடு திரும்பிக்கொண்டிருந்தோம்.
இதன்போது தம்பனை காட்டுப்பகுதியில் உள்ள வீதி வளைவில் வைத்து இரண்டு இளைஞர்கள் முகத்தை துணியால் மறைத்துக் கட்டிக்கொண்டு வாள்களுடன் நாங்கள் பயணித்த மோட்டார் சைக்கிளை இடைமறித்து பாய்ந்தனர்.
கொலை மிரட்டல்
நாங்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தோம். எனது மனைவிக்கு காயங்கள் ஏற்பட்டன.
உடனடியாக இருவரும் மனைவியின் கழுத்தில் கத்தியை வைத்து எங்களிடம் இருக்கின்ற கையடக்க தொலைபேசி, பணப்பை மற்றும் நகைகளை தருமாறு கோரினார்கள்.
அச்சத்தின் காரணமாக அவர்கள் கேட்ட அனைத்தையும் உடனடியாக கொடுத்து விட்டோம். அவற்றை எல்லாம் பறித்துக் கொண்டு காட்டு வழியில் தப்பிச்சென்று விட்டார்கள்.
சம்பவம் இடம்பெற்ற போது அவ்விடத்தில் வேறு யாரும் இருக்கவில்லை. சற்று தொலைவில் தான் மக்கள் நடமாட்டம் காணப்பட்டது.
இது போன்ற சம்பவங்கள் குறித்து பொதுமக்கள் அவதானத்துடன் இருப்பது மட்டுமல்லாமல் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவி்த்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |