கொழும்பிலிருந்து திருகோணமலைக்கு திருப்பியனுப்பப்பட்ட மியன்மார் அகதிகள்
கொழும்பு (Colombo) - மிரிஹானா தடுப்பு முகாமுக்கு அழைத்து செல்லப்பட்ட, மியன்மார் (Myanmar) நாட்டு அகதிகள் 103 பேரும், மீண்டும் திருகோணமலைக்கு (Trincomalee) திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
திருகோணமலை - ஜமாலியா முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த இவர்கள், நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய, பொலிஸ் பாதுகாப்புடன், நேற்று (21) காலை 6.45 மணி அளவில், இரு பஸ்களில் மிரிஹானா தடுப்பு முகாமுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
இவ்வாறு, கொழும்பு நோக்கி, அழைத்து செல்லப்பட்டவர்களை, மிரிஹானா தடுப்பு முகாமிலிருந்து பொறுப்பெடுப்பதற்கு, அனுமதி மறுக்கப்பட்டமையினால், இடை நடுவில் வைத்து அவர்கள், மீண்டும் திருகோணமலைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
அனுமதி மறுப்பு
மிரிஹானா தடுப்பு முகாமில் அவர்களுக்கான போதிய வசதிகள் செய்யப்படவில்லை என்றும், சனி, ஞாயிறு தினங்களாக இருப்பதால், ஏற்பாடுகளை செய்ய முடியாத நிலை இருப்பதாகவும் அங்கிருந்து தகவல் கிடைத்துள்ளதாக தெரிய வருகின்றது.
அத்துடன், மியன்மார் நாட்டு அகதிகளை ஏற்றிக் கொண்டுவந்த, படகோட்டிகளான, மியன்மார் நாட்டுப் பிரஜைகள் 12 பேரையும் இந்த மாதம் (டிசம்பர்) 31ஆம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு, திருகோணமலை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
கடந்த 19ஆம் திகதி மாலை திருகோணமலையை வந்தடைந்த மியன்மார் நாட்டு படகிலிருந்த 115 அகதிகளும் திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை (20) முன்னிலைபடுத்தப்பட்ட போதே, பதில் நீதவான் அப்துல் சலாம் சாஹிர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
அத்தியாவசிய தேவைகள்
மேலும், படகில் கொண்டு வரப்பட்ட, 103 மியன்மார் நாட்டுப் பிரஜைகளையும் கொழும்பு மிரிஹானா தடுப்பு முகாமுக்கு அனுப்பி வைக்குமாறும் நீதிபதியால், உத்தரவிடப்பட்ட நிலையிலேயே இவர்கள் கொழுப்புக்கு அழைத்துச் செய்யப்பட்டனர்.
எனினும், மிரிஹானா தடுப்பு முகாமில் இருந்து, இவர்களைப் பொறுபெடுப்பதற்கு, அனுமதி கிடைக்க பொறாமையினால், மீண்டும் இவர்கள், திருகோணமலை ஜமாலியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இவர்களுக்கு தேவையான உணவு உட்பட அத்தியாவசிய தேவைகளை திருகோணமலை செயலகம் செய்து வருவதாகவும், மீண்டும் இவர்கள் நாளை (23) கொழும்பு, மிரிஹானா தடுப்பு முகாமுக்கு அழைத்து செல்லப்பட உள்ளதாகவும் திருகோணமலை பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஏ. எச். எம். றியாத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |