முஸ்லிம்களின் பெயரில் மதத் தலங்கள் மீது தாக்குதல் திட்டம் - போலிப்பெயரில் தகவல் பரப்பிய இளைஞன்
இலங்கையிலுள்ள பல முக்கிய பௌத்த வழிபாட்டுத் தலங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்போவதாக சமூக வலைத்தளங்களில் செய்தி பரப்பிய நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
முஸ்லிம்களின் பெயர்களை பயன்படுத்திப் போலியான சமூக ஊடகக் கணக்குகளை உருவாக்கி இவ்வாறு பிரச்சாரம் செய்த குற்றச்சாட்டில் 21 வயதுடைய இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
மதத் தலங்கள் மீது தாக்குதல்கள்
ஸ்ரீ தலதா மாளிகை, தூபாராமய, ஸ்ரீ மகா போதி மற்றும் தம்புள்ள விகாரை உள்ளிட்ட பல மதத் தலங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்போவதாக அச்சுறுத்தும் தகவல்களை இச்சந்தேகநபர் பரப்பியிருந்ததாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சரின் தகவலுக்கமைய, இச்சம்பவம் தொடர்பில் ஐந்து முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. அத்துடன், இச்செய்திகளை பரப்பிய சமூக ஊடகக் குழுக்கள் குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குருணாகல், இப்பாகமுவ பகுதியை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்ட சந்தேகநபர் கைது செய்யப்பட்டு, கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
முறுகல் நிலை
சந்தேகநபர் முஸ்லிம் போலி அடையாளங்களைப் பயன்படுத்திச் சமூக ஊடகக் கணக்குகளை உருவாக்கி, இவ்வாறான அச்சுறுத்தல் செய்திகளைப் பரப்பியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக அமைச்சர் விஜேபால பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.

பொலிஸ் மற்றும் விசாரணைப் பிரிவுகளினால் இது தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
நாட்டில் மதங்களுக்கு இடையில் முறுகல் நிலையை ஏற்படுத்த முயல்வோருக்கு எதிராக தராதரம் பாராமல் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் எச்சரித்துள்ளார்.
மனைவியுடன் ஏற்பட்ட தகராறு: 1700 அடி மலையில் இருந்து குதித்து உயிரை மாய்த்துக் கொண்ட கணவன் News Lankasri
20ஆம் ஆண்டு திருமணக் கொண்டாட்டத்தில் சூர்யாவின் வித்தியாசமான ஸ்டைல்! பின்னணி என்ன தெரியுமா? Manithan