தமிழ் ஊடகவியலாளர்கள் படுகொலைக்கான நீதி தொடர்பில் ஸ்ரீநேசன் ஆதங்கம்
நாட்டுப் பற்றாளர் நடேசனுக்கு நீதி கிடைக்க வேண்டும், அது கிடைக்கக் கூடிய விதத்தில் இந்த அரசாங்கம் செய்யப்பட வேண்டும் என என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் வைத்து சுட்டு படுகொலை செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் 22 வது ஆண்டு நினைவு தினைத்தை முன்னிட்டு நேற்று(31.05.2026) மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் ஊடகவியலாளருக்கான நீதி
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஒற்றையாட்சி பொறிமுறை, பௌத்த மேலாதிக்க அதிகாரத்தை செலுத்துகின்ற வழிமுறை, என்பன தமிழ் மொழியாளர்களை இரண்டாம் தரப் பிரதிகளாக அவர்கள் பார்க்கின்றார்கள்.

இரண்டாம் தரப் பிரதிகளாக நாங்கள் இருக்கின்ற வரைக்கும் நாங்கள் சம அந்தஸ்து பெறாத வரைக்கும் நமக்கான நீதி கிடைப்பது என்பது கடினமாக இருக்கின்றது.
ஒற்றை ஆட்சி பொறிமுறை அல்லது உள்நாட்டு ஒருமுறை பௌத்த மேலாதிக்க கட்டமைப்பு என்பன நிச்சயமாக எனக்கு நீதியை தராது அது பக்க சார்பானதாகத்தான் செய்யப்படும்.
கருத்துக்கள் எங்களுக்கு பிடிக்காமல் இருக்கலாம் அதற்காக அந்த கருத்துக்களை நாங்கள் முடக்ககூடாது, தடுக்கக்கூடாது, அந்த கருத்து வெளியிடும் சுதந்திரம் என்பது ஜனநாயகத்தின் முக்கிய தூண்களின் ஒன்றாக காணப்படுகிறது. ஊடகத்துறை ஜனநாயகத்தின் நான்காவது தூண் எனவும் சொல்லப்படுகின்றது.

அத்துடன், தற்போது கைது செய்யப்பட்டு சிறைசாலையில் சுரேஸ் சாலே என்பவர் தொடர்பான விபரத்தை மிக அழகாக துல்லியமாக ஆசாத் மௌலானா வழங்கியுள்ளார்.
இந்த விடயங்களை எல்லாம் நாம் எடுத்துப் பார்க்கின்ற போது உண்மைகள் இப்போது உறக்கத்தை விட்டு கொஞ்சம் வெளிவருகின்ற தன்மை காணப்படுகின்றது என்றார்.
இந்நிகழ்வில், கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் வடிவேல் சக்திவேல், நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.ஸ்ரீநேசன், இ.ஸ்ரீநாத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

