வடக்கில் முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி வழங்கும் நிகழ்வு
யாழ்ப்பாணம்
இன்றையதினம் நல்லூரடியில் அமைக்கப்பட்டுள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்துக்கு முன்னால் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி வழங்கப்பட்டது.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது அமைப்பின் ஏற்பாட்டில் இந்த முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல் முன்னெடுக்கப்பட்டது.
இதில் குரல் அற்றவர்களின் குரல் அமைப்பினர், பொது அமைப்புகளை சேர்ந்தவர்களும் இணைந்திருந்தனர்.
முள்ளிவாய்க்கால் கஞ்சி
மக்கள் உணர்வுபூர்வமாக முள்ளிவாய்க்கால் கஞ்சியை வாங்கி அருந்திச் சென்றதை அவதானிக்க முடிந்தது.
இதேவேளை, இன்றையதினம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் கைதடியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கி வைக்கப்பட்டது.
இதில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கலந்து கொண்டார்.
கிளிநொச்சி
கிளிநொச்சியில் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வானது இன்று (13) கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக இடம்பெற்றுள்ளது.
இதேவேளை, இன்றையதினம் கிளிநொச்சி பேருந்து தரிப்பு நிலையத்தில் யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு
தமிழ் இனப்படுகொலை வாரத்தின் இரண்டாவது நாளான இன்று ( 13.05.2025) முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை சந்தியம்மன் ஆலயம் முன்பாக முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச சபைக்கு தெரிவான உறுப்பினர்களான ஞா.யூட்பிரசாத் மற்றும் த.அமலன் சமூக செயற்ப்பாட்டாளர்கள் மக்கள் இணைந்து இந்த நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதேவேளை, இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் முள்ளியவளை மேற்கு வட்டாரக்கிளையின் ஏற்பாட்டில், முள்ளியவளைப் பகுதியில் இன்று (13.05.2025) முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.
முள்ளியவளை மேற்கு வட்டாரக்கிளையின் தலைவர் குமாரையா உதயகுமாரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், முள்ளிவாய்க்கால் இறுதிக்கட்ட யுத்தத்தில் உயிர்நீத்த உறவுகளுக்கு சுடரேற்றி, அகவணக்கம் செலுத்தப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதனைத்தொடர்ந்து முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.
இந் நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பங்கேற்றிருந்தார்.
இந்த அஞ்சலி நிகழ்வு மற்றும், கஞ்சி வழங்கும் செயற்பாட்டில் முள்ளியவளை மேற்கு வட்டாரத்தில் இலங்கைத் தமிழ் அரசுக்கட்சி சார்பாக போட்டியிட்டு வெற்றியீட்டிய இரத்தினம் ஜெகதீசன், இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் தொண்டர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தார்கள்.
நெல்லியடி
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் இரண்டாம் நாள் நினைவேந்தலும் கஞ்சி வழங்கலும் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் வடமராட்சி கிளையினரின் ஏற்பாட்டில் இவ் நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டது.
நெல்லியடி பேருந்து நிலையத்தில் வைத்து முள்ளிவாயக்கால் கஞ்சி காய்ச்சி சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டு நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டது.
வவுனியா
யாழ் பல்கலைக்கழக வவுனியா கலைப்பீட மாணவர் ஒன்றியத்தினரால் ஆரம்பித்து வைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு வவுனியா பிரதான தபால் நிலையத்திற்கு முன்பாக இன்று (13.05) இடம்பெற்றது.
தமிழர் தாயகம் எங்கும் பயணித்து முள்ளிவாய்க்கால் கஞ்சியினை பரிமாறி தமிழ் மக்கள் இனவழிப்புக்கு உள்ளான வரலாற்றினையும், வலிகளையும் இளைய தலைமுறையினருக்கு கடத்தும் செயற்பாட்டினை குறித்த பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்துள்ளனர்.
அந்தவகையில் வீதியால் சென்ற தமிழ், சிங்கள மக்களுக்கு முள்ளிவாய்கால் கஞ்சி வழங்கி வைக்கப்பட்டது.
அத்துடன், வலிந்து காணமால் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் வவுனியா இலுப்பையடி பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வும் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த நிகழ்வுகளில், பொதுமக்கள் பலர் உணர்வு பூர்வமாக வருகைதந்து கஞ்சி அருந்தி சென்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |











உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 9 மணி நேரம் முன்

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam
