முல்லைத்தீவில் இப்படியொரு இடமா! மறக்கப்பட்ட வௌவால்வெளி
முல்லைத்தீவு - வற்றாப்பளை மூன்றாம் கட்டைச் சந்திக்கு கிழக்கே உள்ள வயல் வெளி வௌவால்வெளி என அழைக்கப்படும்.
நன்னீர் சதுப்பு நிலத்தை கொண்டிருக்கும் இது வயல் நிலங்களையும் கொண்டுள்ளது. இந்த நிலத்தில் நானூறு சதுர மீற்றர் பரப்பளவில் வௌவால்கள் தங்குமிடம் உண்டு.
மருது மரங்களும் பிரப்பங்கொடிகளையும் சம்புப் புல்லையும் கொண்ட நிலமாக இது காணப்படுகிறது.
இதற்கு முன்னர் அறுநூறு சதுரமீற்றருக்கும் அதிகமாக இருந்தது.
அரச அதிகாரிகளின் கவனயீனம்
பத்தாயிரம் வரையான வௌவால்கள் வாழ்ந்து கொண்டிருந்த போதும் இப்போது ஆயிரத்திற்கும் குறைவான வௌவால்களையே காண முடிகிறது.
விடுதலைப்புலிகள் அமைப்பினுடைய காலத்தில் வௌவால்வெளி வௌவால்களுக்கான சரணாலயம் என ஒதுக்கப்பட்டிருந்த இந்த பகுதி, இப்போது பரப்பளவில் குறுகி விவசாய நிலங்களால் ஆக்கிரமிக்கப்படுகிறது.
பழங்களை பிரதான உணவாக உண்டு வாழும் வௌவால்கள் இப்போது வாழ்விடங்களை இழந்து வருகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது.
குடித்தொகை பரவலும் இதற்கொரு காரணமாக பார்க்கப்படுகிறது. வௌவால்களின் வாழிட இழப்புக்கு விவசாயிகளிடையே இவை தொடர்பான போதியளவு அறிவில்லாமை பிரதான காரணமாகும்.
மருது மரங்களில் தொங்கிய நிலையில் பகல் பொழுதை கழித்து இரவில் உணவுக்கு இவை செல்வது இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும்.
மருது மரங்களை அழிப்பது இவற்றின் வாழ்விடங்களை பெருமளவில் குறைத்து விடுகின்றது. அரச அதிகாரிகளும் சமூக ஆர்வலர்களும் இந்த பழ வௌவால்களை பாதுகாப்பதில் அதிக கவனமெடுக்காமை கவலையளிக்கிறது.
சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை
இவர்களின் இந்த பாரா முகமான செயற்பாடானது பழ வௌவால்களை இழக்கும் ஆபத்தை விரைவாக்குகின்றன.
இயற்கைத் தேர்வை மாற்றியமைப்பது சூழல் நேயத்தன்மையற்றது. மனிதர்களின் இருப்பை இது கேள்விக்குள்ளாக்கும் என்பது உணரப்படாமை வேதனையளிக்கிறது.
வௌவால் வெளியானது ஒரு பகுதியில் விவசாய நிலத்தையும் மற்றொரு பகுதியில் நன்னீர் சதுப்பு நிலத்தையும் கொண்டது. மழைக்காலங்களில் நீரேந்து பகுதியாகவும் இது அமைகிறது.
இங்கு தேங்கும் நீர் நந்திக்கடல் ஊடாக இந்து சமுத்திரத்தை அடைகிறது. தெற்கு பகுதியில் வயல் நில வாய்க்காலுடன் கூடிய பாதையை எல்லையாக கொண்டது.
முல்லைத்தீவில் பழைமைவாய்ந்த குமாரபுரம் முருகன் ஆலயத்திற்கு அருகில் இந்த இடம் அமைந்திருக்கின்றது.
தற்போது இந்த இடம், பெயர் மறந்து, அதன் பயன் மறந்து, வயல் நிலமாக மாறிக்கொண்டு போகிறது வேதனையழிப்பதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை கொள்கின்றனர்.
வௌவால்வெளிக்கு அருகிலுள்ள பழங்கள் தரும் மரங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. வேம்பு, பனை, பெரு நாவல் போன்றன அழிக்கப்படுவதனால் அவை உணவுக்கான தட்டுப்பாட்டை எதிர்கொள்வது அவதானிக்கப்பட்டுள்ளது.
இந்த வௌவால்கள் தியோகுநகர்,வற்றாப்பளை, முறிப்பு, உடுப்புக்குளம், மாமூலை, முள்ளியவளை, நாவல்காடு, பொன்னகர், தண்ணீரூற்று போன்ற இடங்களில் பரந்த பிரதேசத்தில் இரவு வேளையில் உணவு தேடுவதை அவதானிக்கலாம்.
வித்து பரம்பல்
இந்த இடங்கள் மா, பலா, நாவல், தென்னை, பனை, வேம்பு போன்ற பழமரங்களை அதிகம் கொண்டுள்ளன.
தென்னை மரங்கள் பழ வௌவால்களினால் மகரந்தச் சேர்கைக்கு உள்ளாவதாகவும் தாவர வித்துக்கள் பரம்பலடைவதற்கு மிகப் பெரியளவில் உதவுவதாகவும் விவசாய ஆசிரியர் ஒருவர் இந்த விடயம் தொடர்பில் விளக்கியுள்ளார்.
வடமாகாண முன்னாள் விவசாய அமைச்சரும் சுற்றுச்சூழல் ஆர்வலருமான ஐங்கரநேசனும் இதே விளக்கத்தை குறிப்பிட்டிருந்தார்.
பழ வௌவால்களை பாதுகாப்பதற்கு விவசாயிகளுடன் கூட்டிணைந்த முயற்சியை மேற்கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் வௌவால்வெளி வௌவால்களையும் அவற்றின் வாழிடத்தையும் பாதுகாக்கலாம் என மேலும் குறிப்பிட்டார்.
முல்லைத்தீவு மாவட்ட உதவி அரசாங்க அதிபர் குறிப்பிடும் போது, அவற்றை பாதுகாப்பதற்கான முயற்சிகளுக்கு தங்கள் உதவியாக இருக்கலாம் என தெரிவித்திருந்தார்.



