கட்சிக் கூட்டத்தில் வாதத்தை கிளப்பிய அரியநேத்திரன் விவகாரம்: சாணக்கியன் எம்.பி கொடுத்த விளக்கம்
மட்டக்களப்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மாவட்டக் கூட்டத்தில் முன்னாள் எம்.பி. அரியநேத்திரன் விவகாரம் குறித்தும் பேசப்பட்டுள்ளது.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்டக் கூட்டம் நேற்று(04.01.2026) மாலை மட்டக்களப்பு - சின்ன உப்போடையில் இடம்பெற்றுள்ளது.
இந்தக் கூட்டத்தில், தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறிநேசன், மருத்துவர் சிறிநாத், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன், முன்னாள் மட்டக்களப்பு மாநகர மேயர் சரவணபவன், கட்சியின் வாலிப முன்னணியின் தலைவர் சேயோன் உட்பட சுமார் 40 பேர் கலந்துக் கொண்டுள்ளனர்.
அரியநேத்திரனின் விலகல்
கடந்த கிறிஸ்மஸ் தினத்தன்று மட்டக்களப்பில் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வாலிப முன்னணி நடத்திய மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கத்தின் நினைவேந்தல் நிகழ்வில், ஏற்கனவே கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரனை ஈகைச் சுடர் ஏற்றியுள்ளார்.
இவரை மேடைக்கு அழைத்த விவகாரம் தமிழரசுக் கட்சிக்குள் வாத விவாதங்களை ஏற்படுத்தியிருந்த வேளையில், நேற்று நடந்த கூட்டத்தில் இந்த விடயம் குறித்து மேலோட்டமாக பேசப்பட்டுள்ளது.

அந்த சமயத்தில் தலைமைக் கதிரையில் இருந்த சாணக்கியன் எம்.பி, தமக்கு பக்கத்தில் இருந்த சிறிநேசன் எம்.பிக்கு, ஏற்கனவே கட்சியிலிருந்து அரியநேத்திரனை வெளியேற்றுவது என்று எடுக்கப்பட்ட முடிவு தொடர்பாக அவருக்குக் கட்சியின் பொதுச்செயலாளரால் அனுப்பப்பட்ட கடிதத்தின் பிரதியைத் தனது கைத்தொலைபேசியில் இருந்து எடுத்துக் காட்டியுள்ளார்.
விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த சாணக்கியன் எம்.பி
இந்தக் கடிதம் பதிவுத் தபாலில் தமக்குக் கிடைக்கவில்லை என அரியநேத்திரன் கூறியதாக, சாணக்கியனின் காதுக்குள் சிறிநேசன் கூறியுள்ளார்.
இதனை அரியநேத்திரன் கட்சியின் தலைமையுடன் பார்த்துக் கொள்ளட்டும், அது எங்களுக்குரிய விடயம் அல்ல எனக் கூறி சாணக்கியன் இந்த விவாகரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

இந்தநிலையில், உள்ளூராட்சி உறுப்பினர்களின் செயற்பாடுகள் தொடர்பாகவும் அவர்களை வழிநடத்துகின்ற வழிகாட்டல்கள் தொடர்பாகவும் இறுக்கமான சில நடைமுறை உத்தரவுகளை இந்தக் கூட்டத்தில் சாணக்கியன் வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
கூட்டம் பெரும்பாலும் கலந்துரையாடல் பாணியில் நடைபெற்றுள்ளதுடன், சில இடங்களில் வாதங்கள் பயனுள்ளதாக இருந்தது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.