விமான பணிப்பெண் வேலைக்கு ஆசைப்பட்ட மகள்-தாய் செய்த காரியம்
மகளின் விமானப் பணிப்பெண்ணாக வர வேண்டும் என்ற கனவை நனவாக்க தேவையான பணத்தை பெற்றுக்கொள்ள சுமார் 7 லட்சம் ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டதாக கூறப்படும் பெண்ணொருவரை கொட்டாவை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டு தங்க முலாம் பூசப்பட்ட ஆபரணங்களை வைத்த பெண்
வீடொன்றில் வேலை செய்து வந்த 47 வயதான பெண்ணே இவ்வாறு நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹோமாகமை பிரதேச செயலாளர் அலுவலகத்தில் நிர்வாக அதிகாரி ஒருவரின் வீட்டில் தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டுள்ள இந்த பெண் அதற்கு பதிலாக தங்க முலாம் பூசப்பட்ட வேறு ஆபணரங்களை வைத்துள்ளதாக கொட்டாவை பொலிஸார் கூறியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட பெண் கலவிலவத்தை பகுதியை சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சில மாதங்களுக்கு முன்னர் தினமும் ஆயிரம் ரூபா சம்பளத்திற்காக ஹோமாகமை பிரதேச செயலாளர் அலுவலகத்தின் நிர்வாக அதிகாரியின் வீட்டில் வேலை சேர்ந்து அங்கு வேலை செய்து வந்துள்ளதுடன் வீட்டில் இருப்பவர்களின் நம்பிக்கை வென்றெடுத்துள்ளார்.
இந்த நிலையில், வீட்டில் அலுமாரியில் வைக்கப்பட்டிருந்த சுமார் 7 லட்சம் ரூபா பெறுமதியான தங்கச்சங்கிலி, இரண்டு மோதிரங்கள், சுமார் ஒரு லட்சம் ரூபா பெறுமதியான அலைபேசி என்பவற்றை கொள்ளையிட்டுள்ளதுடன் வழமை போல் வீட்டில் வேலை செய்து வந்துள்ளார்.
கொள்ளையிட்ட பொருட்களை விற்று பெற்ற பணம் மகளின் கனவுக்காக செலவு
வீட்டில் வைக்கப்பட்டிருந்த தங்க ஆபரணங்கள் காணாமல் போயிருப்பதை அறிந்த வீட்டில் இருந்த பெண்ணொருவர் அது குறித்து கொட்டாவை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதனையடுத்து வீட்டுக்கு விசாரணை நடத்த சென்றிருந்த பொலிஸார் வீட்டில் சந்தேகத்திற்குரிய வகையில் நடந்துக்கொண்ட வீட்டில் வேலை செய்யும் பெண்ணிடம் விசாரணை நடத்தியுள்ளதுடன் தங்க ஆபரணங்கள் மற்றும் அலைபேசியை கொள்ளையிட்டதை அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
இதனடிப்படையில் கொள்ளையிட்ட தங்க ஆபரணங்கள் ஹோமாகமையில் நகரில் உள்ள அடகு கடையொன்றில் இரண்டு லட்சத்து 30 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டிருந்த நிலையில் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
அலைபேசி நுகேகொடையில் உள்ள தொலைபேசி விற்பனை நிலையத்தில் விற்கப்பட்டிருந்ததுடன் அதனையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கொள்ளையிட பொருட்களை விற்பனை செய்து பெற்றுக்கொண்ட பணத்தை மகளின் விமானப் பணிப்பெண்ணாகும் கனவுக்காக செலவிட்டுள்ளமை பெண்ணிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள பெண் ஹோமாகமை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவிருந்தார்.