முன்னாள் அமைச்சரின் வீட்டில் பாரிய கொள்ளை - சிக்கிய பெருந்தொகை வெளிநாட்டு பணம்
முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித் ரம்புக்வெல்லவுக்கு சொந்தமான வீட்டிலிருந்து பெருமளவு பணம் மற்றும் பொருட்கள் காணாமல் போயுள்ளாதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கொழும்பு - நாரஹேன்பிட்ட வீட்டுத்தொகுதியிலுள்ள வீட்டில் 4,275 அமெரிக்க டொலர், 14 லட்சம் ரூபாய் பணம் மற்றும் வீட்டு உபகரணங்கள் உள்ளிட்ட பல பொருட்கள் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சம்பவம் ஒகஸ்ட் 08ஆம் திகதிக்கும் செப்டம்பர் 30ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலத்தில் இடம்பெற்றுள்ளதாக முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வீட்டில் பாரிய கொள்ளை
எனினும், ஆரம்பகட்ட விசாரணைகளின்படி கொள்ளையிடப்பட்ட வீடு ரமித் ரம்புக்வெல்லவின் மனைவியின் தந்தைக்கு சொந்தமானது என்பது தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், அவரது அறிவுறுத்தலுக்கமையவே ரமித் ரம்புக்வெல்லவுக்கு சொந்தமான பொருட்கள் நுகேகொட பகுதியில் உள்ள கிடங்கு தொகுதி ஒன்றுக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
வெளிநாட்டில் வசிக்கும் அவரது மனைவியின் தந்தையும் இது தொடர்பில் மின்னஞ்சல் ஊடாகப் பொலிஸாருக்கு முறைப்பாடு ஒன்றை அனுப்பியுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்திற்கு விடயங்கள் அறிவிக்கப்படவுள்ளது. அத்துடன், நாரஹேன்பிட்ட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.