அரச அலுவலர்களுக்கு யாழில் வைத்து அமைச்சர் வழங்கியுள்ள அறிவுறுத்தல்
அரச அலுவலர்கள் மக்களின் பிரச்சினைகளை அடையாளம் கண்டு அவர்களது வாழ்க்கையை கட்டியெழுப்ப வேண்டும் என கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சர் உபாலி பன்னிலகே அறிவுறுத்தியுள்ளார்.
சமூக சக்தி (பிரஜாசக்தி) வறுமையை ஒழிப்பதற்கான தேசிய வேலைத் திட்டத்தின் யாழ்ப்பாண மாவட்டத்திற்கான விழிப்புணர்வு நேற்றைய தினம் (11.03.2026) தந்தை செல்வநாயகம் மண்டபத்தில் நடைபெற்றிருந்தது.
இதில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மக்களின் வாழ்வை விரிவுப்படுத்தல்
மேலும் தெரிவிக்கையில், கிராமிய வறுமையை ஒழிக்காமல் நாட்டின் வறுமையை ஒழிக்க முடியாது. ஜனாதிபதியின் எண்ணக்கருவான "வளமான நாடு அழகான வாழ்க்கை" என்பதற்கு இணங்க, நாட்டை வளமான நாடாக மாற்ற முதலில் கிராமங்களை வளமாக்க வேண்டும். நாட்டில் வாழும் அனைத்து இன மக்களின் வாழ்வை விரிவுபடுத்த வேண்டும்.
இலங்கையிலுள்ள அனைத்து கிராம அலுவலர் பிரிவுகளிலும் இத்திட்டத்தை முன்னெடுக்கப்படும். இதுவரை காணப்பட்ட வறுமை ஒழிப்பு திட்டங்களை விட இது மாறுபட்ட திட்டமாக காணப்படுகிறது. இத்திட்டத்தின் ஆரம்பமும் முடிவும் மக்களாகவே இருக்க வேண்டும்.

பிரஜாசக்தி திட்டம்
மக்களே முதன்மையாக இருப்பதால் நிகழ்ச்சித் திட்டம் உயிர்ப்புடன் இருப்பதுடன், இறுதியாக அதன் பலன்கள் மக்களையே சென்றடைய வேண்டும். மேலும், பிரஜாசக்தி திட்டத்தை ஒருங்கிணைந்த திட்டமாக மேற்கொள்ள வேண்டும்.
மேலும், கிராம மக்களோடு கலந்துரையாடி திட்டங்களை நடைமுறைப்படுத்துவதுடன் மக்களின் வாழ்வை கட்டியெழுப்ப வேண்டும். அரச அலுவலர்கள் மக்களின் பிரச்சினைகளை அடையாளம் கண்டு அவர்களது வாழ்க்கையை கட்டியெழுப்ப வேண்டும். நாட்டில் வாழும் அனைத்து மக்களின் பொருளாதார சமூக நிலை மேம்பாடு அடைய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.