ஐ.தே.கட்சியில் இணைவார் என பேசப்பட்ட அமைச்சர் பிரசன்ன மகிந்தவின் மேடையில்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து விலகி, ஐக்கிய தேசியக்கட்சியில் இணைய போவதாக கடந்த வாரம் தகவல்கள் பரவி வந்த நிலையில், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையில், புத்தளம் ஆராச்சிக்கட்டுவ பிரதேசத்தில் இன்று நடைபெற்ற “ஒன்றாக எழுவோம்” என்ற தலைப்பில் பொதுஜன பெரமுன நடத்தி வரும் கூட்ட மேடையில் ஏறியுள்ளார்.
கடந்த மே மாதம் 9 ஆம் திகதி போராட்டகாரர்களால் தீயிட்டு எரிக்கப்பட்ட ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் வீடு அமைந்துள்ள இடத்தில் இந்த கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
கூட்டத்திற்கு முன்னர் கலந்துரையாடலில் ஈடுபட்ட பிரசன்ன

கூட்டம் நடைபெறுவதற்கு முன்னர் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ச, ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த, முன்னாள் அமைச்சர்கள் காமினி லொக்குகே, நாமல் ராஜபக்ச, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மதுர விதானகே, சம்பத் அத்துகோரள உள்ளிட்டோர் விசேட கலந்துரையாடல் ஒன்றையும் நடத்தியுள்ளனர்.
இதன் பின்னர், கூட்டம் நடத்தப்படும் இடத்திற்கு சென்ற பிரசன்ன ரணதுங்க, கூட்டத்தை ஏற்பாடு செய்துக்கொண்டிருந்தவர்களிடம் கலந்துரையாடி விட்டு, இன்று நடைபெறும் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் கலந்துக்கொள்வதற்காக கொழும்பு நோக்கி புறப்பட்டுள்ளார்.
அமைச்சர் பிரசன்ன ரதுங்க கடந்த வாரம் வெளிநாடு சென்றிருந்ததுடன் இதன் காரணமாக 22 வது அரசியலமைப்புத் திருத்தச்சட்டம் சம்பந்தமாக நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கடுப்பிலும் கலந்துக்கொள்ளவில்லை.
ஜனாதிபதிக்கு ஆதரவளிப்பது ஐ.தே.கட்சியில் இணைவதாக அமையாது

இதனிடையே பிரசன்ன ரணதுங்க, ஐக்கிய தேசியக்கட்சியில் இணைய போவதாக தகவல்கள் வெளியாகின. இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர், தற்போதைய சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளித்து வருவது, பொதுஜன பெரமுனவில் இருந்து விலகிச் செல்லும் நடவடிக்கையல்ல எனக் கூறியுள்ளார்.
அத்துடன் ஜனாதிபதிக்கு ஆதரவளிப்பது யானை மீது ஏறுவதாக அமையாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான பின்னணியில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மேடையில் ஏறியமை சம்பந்தமாக, கூட்டத்தை ஏற்பாடு செய்த ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரசன்ன ரணதுங்கவுக்கு தமது நன்றிகளை தெரிவித்துள்ளனர்.