துறைமுக நகரில் குடியேறுவோருக்கு வாக்களிக்க முடியாத நிலை..! மரிக்கார் விடுத்துள்ள எச்சரிக்கை
கொழும்பு துறைமுக நகரத்தில் எதிர்காலத்தில் குடியேற திட்டமிடுவோருக்கு உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் வாக்களிக்க முடியாத நிலை காணப்படுவதாக உட்கட்டமைப்பு மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக அவர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படலாம் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
துறைசார் அதிகாரிகளுடன் அண்மையில் இடம்பெற்ற சந்திப்பின் போது கருத்து தெரிவித்த போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
வாக்களிக்க முடியாத நிலை
மேலும் தெரிவிக்கையில், துறைமுக நகரத்தில் குடியேறக்கூடியவர்கள் கொழும்பு மாவட்டத்தின் கீழ் வரையறுக்கப்பட்ட போதிலும், அவர்களால் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் வாக்களிக்க முடியாத நிலை ஏற்படும்.

ஜனாதிபதித் தேர்தல் அல்லது நாடாளுமன்றத் தேர்தல் இடம்பெற்றால், அவர்களால் கொழும்பு மாவட்டத்தின் கீழ் வாக்களிக்க முடியும். ஆனால், உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வாக்களிப்பதற்கு அவர்களுக்கு இடம் எதுவும் இல்லை. இது அவர்களின் அடிப்படை உரிமைகளை மீறும் செயலாகும்.
துறைமுக நகரத்துக்காக பிரத்தியேகமாக தனியான உள்ளூராட்சி மன்றம் ஒன்றை உருவாக்க வேண்டியிருக்கலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
துறைமுக நகர நிலப்பரப்பு
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், 1995ஆம் ஆண்டின் 22ஆம் இலக்க நிர்வாக மாவட்டங்கள் சட்டத்தின் 3ஆம் பிரிவின் கீழ், உள்நாட்டலுவல்கள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரால் வெளியிடப்பட்ட 2019ஆம் ஆண்டின் வர்த்தமானி அறிவித்தலின் மூலம், துறைமுக நகர நிலப்பரப்பு ஏற்கனவே கொழும்பு நிர்வாக மாவட்டத்தின் ஒரு பகுதியாக சேர்க்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மாவட்ட ரீதியிலான பிரதிநிதித்துவம் தொடர்பான கவலைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளனர்.

இதற்கு எஸ்.எம்.மரிக்கார் கூறுகையில், வர்த்தமானி அறிவித்தலானது நாடு தழுவிய மற்றும் மாவட்ட ரீதியிலான தேர்தல்களுக்கான சேர்க்கையை உறுதிப்படுத்திய போதிலும், உள்ளூராட்சி அதிகாரசபைகளின் பிரதிநிதித்துவப் பிரச்சினையை அது தீர்க்கவில்லை. இந்த விவகாரம் நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லப்பட்டால், அது துறைமுக நகரத் திட்டத்தை தாமதப்படுத்தக்கூடும் என குறிப்பிட்டுள்ளார்.
அச்சத்தில் நாட்டிலிருந்து அவசரமாக தப்பியோடும் அரசியல்வாதி மற்றும் உயர் அதிகாரிகள் - ஆதாரங்களுடன் நெருங்கும் புலனாய்வாளர்கள்