கொரோனாவை பயன்படுத்தி சுரண்டலில் ஈடுபடும் அரசாஙகத்திற்கு நெருக்கமான வியாபாரிகள்! ரஞ்சன் ராமநாயக்க
தேர்தல் காலத்தில் நாட்டு வீரர்கள் என மகிமைப்படுத்தி, அவர்களின் வாக்குகளை பெற்றுக் கொள்வதற்காக விமான கட்டணங்களை செலுத்தி நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட வெளிநாடுகளில் உள்ள தொழிலாளர்கள் தற்போது கொரோனா வைரஸால் துன்பங்களை அனுபவித்து வரும் சூழ்நிலையில் அவர்கள் பாரிய சுரண்டலுக்கு சிக்கி இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
தமது பிள்ளைகள், குடும்பத்தினரை வாழ வைப்பதற்காக மத்திய கிழக்கு நாடுகளில் பாத்திரங்களை கழுவி, கழிவறைகளை கழுவி வெளிநாடுகளில் தொழிலாளர்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த லட்சக்கணக்கான பணத்தை அரசாங்கத்திற்கு நெருக்கமான வியாபாரிகள் கொள்ளையிட்டு வருகின்றனர்.
இதற்கு அரசாங்கத்தின் முழுமையான ஆசி கிடைத்துள்ளது. வெளிநாடுகளில் உள்ள தொழிலாளர் இலங்கைக்கு வரும் போது சாதாரணமாக அறவிடப்படும் விமான பயணச்சீட்டுக்கான கட்டணங்களை, அவர்கள் தற்போது அதிகளவான கட்டத்தை செலுத்த நேரிட்டுள்ளது. இலங்கைக்கு வந்த பின்னர் அரசாங்கத்திற்கு நெருக்கமான வியாபாரிகளின் ஆடம்பர ஹோட்டல்களில் தங்க நேரிட்டுள்ளது.
இந்த ஹோட்டல்களில் தங்குவதற்காக அவர்கள் நான்கு, ஐந்து மாதங்களாக கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்திற்கு ஈடான பணத்தை செலவிட நேரிட்டுள்ளது. மிகவும் பாரதூரமான அநீதி.
அரசாங்கத்துடன் சம்பந்தப்பட்ட பிரபல நபர்கள் இந்த வியாபாரத்தை செய்வதால், ஊடக நிறுவனங்களும் இந்த பிரச்சினை வெளிக்கொண்டு வருவதில்லை எனவும் ரஞ்சன் ராமநாயக்க குறிப்பிட்டுள்ளார்.