சிங்கள பௌத்த மயமாக்கலுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும்: கஜேந்திரன் ஆதங்கம்
திருகோணமலையில் எங்கு பார்த்தாலும் சிங்கள பௌத்த மயமாக்கல் மிக தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
அன்னை பூபதியின் 35 வது நினைவு தினத்தை முன்னிட்டு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இணைந்து கொண்ட போதே இதனை ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
35 வருடங்களுக்கு முன்னர் தமிழீழ மண்ணிலே வந்திறங்கிய இந்திய படைகள் தமிழ் மக்களுக்கு எதிராக தங்களுடைய ஆயுதங்களை ஏந்தியும் ஆயுதங்களைத் திருப்பியும் தமிழ் மக்கள் மீது பாரிய படுகொலைகளை கட்டவிழ்த்து கொண்டிருந்த நேரத்திலே வகை தொகையின்றி தமிழ் இளைஞர்களை கைது செய்து சித்திரவதை செய்து படுகொலை செய்தனர்.
மேலும் அக்கால கட்டத்திலே அந்த கொடுமைகளுக்கு எதிராக நின்று அதனை உடனடியாக நிறுத்த வேண்டும் அல்லது தமிழர்களுக்கு எதிரான யுத்தத்தை இந்திய படைகள் நிறுத்த வேண்டும் எனக்கோரி தமிழீழ விடுதலைப் புலிகளோடு பேச்சுவார்த்தை இடம்பெற்றது.
நீண்ட கால அரசியல் நோக்கம்
இதன் மூலமாக பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்றும் தமிழர்களுடைய நீண்ட கால அரசியல் நோக்கம் தீர்க்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கையை முன் வைத்து கடந்த 1988 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 19 ஆம் திகதி மட்டக்களப்பில் அன்னை பூபதி நோன்பினை ஆரம்பித்திருந்தார்.
இவர் 31 நாட்கள் உணவு உண்ணாமல் பசியோடு பட்டினியுடன் உண்ணாவிரதம் இருந்து ஈழ தேச பிள்ளைகளை காக்க வேண்டும் என்ற நோக்குடன் நீதி கோரி இந்த உண்ணாவிரத போராட்டத்தை நடத்தினார்கள்.
மேலும், 31 வது நாளில் அவர் துடிதுடித்து இறந்து கொண்டிருக்கின்ற பொழுது இந்திய அரசு கண்டு கொள்ளவில்லை. 31 வது நாள் அவருடைய உயிரும் பிரிந்தது. இருந்த போதிலும் இந்திய அரசு சிங்கள பேரினவாதத்திற்கு ஒத்துழைப்பு வழங்கி தமிழர்களை அடிமைப்படுத்தும் விதத்தில் 13 ஆவது திருத்தச் சட்டத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என நிர்ப்பந்தம் செய்து வருகின்றது.
இதற்கமைய இந்திய அரசு சிங்கள பேரினவாதத்திற்கு ஒத்துழைப்பு வழங்கி தமிழர்களை அடிமைப்படுத்தும் விதத்தில் 13வது திருத்தச் சட்டத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என நிர்ப்பந்தம் செய்து வருகின்றது. அதை ஏற்றுக் கொள்வது என்பது அன்னை பூபதிக்கு செய்யும் துரோகம் என தெரிவித்துள்ளார்.