யாழில் சிறீதரனுடன் குறைகேள் சந்திப்பு
யாழ்ப்பாண மாவட்டம் வலிகாமம் கிழக்கு - கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இருபாலை பிரதேச சமூகமட்ட அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கும் இடையிலான குறைகேள் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பு, இருபாலை நரசிம்ம வைரவர் கோயிலடியில் உள்ள அன்னை இந்திரா சனசமூக நிலையத்தில் நடைபெற்றுள்ளது.
இருபாலை மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவி உசாயினி சிறீதரன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கலந்தரையாடலில், அப்பிரதேச கிராம அலுவலர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், கமக்கார அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு தமது பிரதேசத்தின் தேவைப்பாடுகள், உட்கட்டுமான அபிவிருத்தி எதிர்பார்ப்புகள் உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் கவனத்துக்கு கொண்டுவந்திருந்தனர்.
கலந்துரையாடப்பட்ட பிரச்சினைகள்
குறிப்பாக, உள்ளக வீதிகளுக்கான பெயர்ப்பலகையிடல், இருபாலை தெற்கு, மேற்கு கிராமங்களில் நிலவும் குடிநீர்த் தட்டுப்பாடு, பொதுநோக்கு மண்டபம் இன்மை, செக்கடி இந்து மயான வீதி உள்ளிட்ட உள்ளக வீதிகளின் புனரமைப்பு, மழைநீர் வடிகாலமைப்பு மற்றும் கந்தவேல் ஆண்கள் தமிழ் கலவன் பாடசாலைக்கு நீண்டகாலமாக அதிபர் நியமிக்கப்படாமை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
இதன்போது, வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராசா நிரோஷ், சபையின் உறுப்பினர்களான கமலறேகன், கஜேந்திரகுமார், கஜேந்தினி மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கோப்பாய் தொகுதிக் கிளை உறுப்பினரும் வடக்கு மாகாண சபையின் மேனாள் உறுப்பினருமான அரியகுட்டி பரஞ்சோதி ஆகியோர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




நல்லூர் கந்தசுவாமி கோவில் 18 ஆம் நாள் திருவிழா




