பிரதமர் ஹரிணிக்கும் தமிழரசுக் கட்சியினருக்கும் இடையில் விசேட சந்திப்பு
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பிரதமரும், கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரியவுக்கும் இடையில் விசேட சந்திப்பு ஒன்று கொழும்பில் நேற்று (09.01.2026) இடம்பெற்றுள்ளது.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற குழுக்கூட்டம், நாடாளுமன்ற குழுவின் தலைவர் சிவஞானம் சிறீதரனின் தலைமையில் நடைபெற்றது.
குறித்த கூட்டத்தின் போது பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரியவை சந்தித்து முக்கிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதென தீர்மானிக்கப்பட்டது.
அதனடிப்படையிலேயே, குறித்த சந்திப்பு இடம்பெற்றதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ப. சத்தியலிங்கம் தெரிவித்தார்.
கல்வித்துறையின் சிக்கல்களும், தீர்வுகளும்
இதன்போது தமிழ்மொழி மூல வரலாற்று நூல்கள் மற்றும் பாடத்திட்டங்களில் தமிழர்களின் வரலாறுகள் நீக்கப்பட்டுள்ளமை பற்றி பிரதமரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. அவற்றினை மீண்டும் பாடப்புத்தகங்களில் கொண்டு வரவேண்டும் என தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.
வடக்கு, கிழக்கு பல்கலைக்கழகங்கள் மற்றும் பேராதனை பல்கலைக்கழகத்தினை சேர்ந்த ஆய்வாளர்களை இந்த விடயத்தில் தொடர்புபடுத்தி வரலாற்று தகவல்களை தொகுத்து அவற்றை தமிழ் மொழி மூல பாடத்திட்டத்தில் உள்ளீர்ப்பு செய்ய இதன்போது பிரதமருக்கு தெரிவிக்கப்பட்டது.

இந்த விடயம் தொடர்பில் பிரதமர், உரிய நடவடிக்கை எடுப்பதுடன் எதிர்காலத்தில் தமிழ் வரலாறுகள் பாடத்திட்டங்களில் உள்ளீர்ப்பு செய்யப்படும் என தெரிவித்தார்.
அத்துடன் தமிழ் பாட புத்தகங்கள் மற்றும் தரம் - 01 இற்கான பாடப்புத்தகங்களில் அதிக எழுத்துப் பிழைகள் காணப்படுவதாகவும் பிரதமருக்கு தெரிவிக்கப்பட்டது. அவற்றினையும் விரைவாக திருத்தம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக ஹரிணி பதில் கொடுத்தார்.
மேலும் க.பொ.த உயர்தர பரீட்சைக்கான வினாத்தாள்கள் தயாரிக்கும் போது அவை ஆங்கிலத்தில் தயாரிக்கப்பட்டு பின்னர் மொழிமாற்றம் செய்யப்பட்டே தமிழுக்கு மாற்றப்படுகின்றது. அதில் குறிப்பாக உயிரியல் பாட வினாத்தாள்கள், அவ்வாறு மொழி மாற்றம் செய்யும் போது நிறைய பிழைகள் ஏற்படுகின்றது.
மொழி மாற்றத்தில் காணப்படும் சிக்கலினால் பரீட்சை பெறுபேறுகளிலும் அதிக தாக்கம் ஏற்படுகின்றது. இந்த விடயத்திற்கும் உடன் நடவடிக்கை எடுக்க கோரப்பட்டதுடன், இந்த விடயம் மீள நிகழாது என பிரதமர் உறுதியளித்துள்ளார்.
கோரிக்கைகள்
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வெவ்வேறு திட்டங்களினூடாக அமைக்கப்பட்ட பல பாடசாலை கட்டிடங்கள் இன்னும் பூரணப்படுத்தப்படாமல் உள்ளது. அவற்றில் சில இடிந்துவிழும் ஆபத்தான நிலையில் உள்ளதால் மாணவர்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக உள்ளது.
அவற்றை பூரணப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இங்கு பதிலளித்த பிரதமர், “ கடந்த வருடம் மாகாணத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி பெருமளவில் பயன்படுத்தப்படாமல் மீண்டும் திருப்பியனுப்பப்பட்டுள்ளது. இந்த வருடம் உரிய அதிகாரிகளுடன் நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய நீங்கள் நேரடியாக தலையிட்டு மேற்படி விடயங்களுக்கும் குறித்த நிதியை பயன்படுத்தவும் பிரச்சினைகளை தீர்க்கவும் நடவடிக்கை எடுக்கலாம்” என குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து, யாழ்ப்பாணம் தொழில்நுட்ப கல்லூரியில் ஆரம்ப குழந்தை பருவ பராமரிப்பு கற்கை நெறியினை கடந்த 8 மாதங்களாக தமிழ் மொழி மூலம் கற்று வருகின்றவர்கள், அதற்கான பரீட்டையினை ஆங்கில மொழியில் எழுத வேண்டும் என கட்டாயப்படுத்தப்படுகின்ற விடயம் தொடர்பில் பிரதமரிடம் கூறப்பட்டுள்ளது.
மேற்கூறப்பட்ட விடயத்தை குறிப்பெடுத்த பிரதமல் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.
மேலும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நிலவும் பெருந்தொகை ஆசிரியர் வெற்றிடங்கள் தொடர்பில் பேசப்பட்ட நிலையில், வடக்கில் தமிழ்மொழி மூலம் 3771 வெற்றிடங்களும், சிங்களமொழி மூலம் 68 வெற்றிடங்களும், கிழக்கில் 5854 வெற்றிடங்களும் நிலவுவதாகவும் பிரதமருக்கு தெரியப்படுத்தப்பட்டது.
இந்த வருட ஆசிரிய நியமனங்களின் போது இயலுமானவரை இந்த வெற்றிடங்களை நிரப்ப நாம் நிச்சயம் நடவடிக்கை ஹரிணி பதிலளித்துள்ளார்.
மேற்படி முக்கிய விடயங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் இந்த கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.
இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன், இராசமாணிக்கம் சாணக்கியன், பத்மநாதன் சத்தியலிங்கம், சண்முகம் குகதாசன், ஞானமுத்து ஶ்ரீநேசன், கவீந்திரன் கோடீஸ்வரன், துரைராசா ரவிகரன், சிறிநாத் ஆகியோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.