கிழக்கு ஆளுநர் மற்றும் ஐ.நா வதிவிட ஒருங்கிணைப்பாளர் இடையில் சந்திப்பு
கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகர மற்றும் ஐ.நா வதிவிட ஒருங்கிணைப்பாளர் அலுவலகத்தின் (UNRCO) சமாதானம் மற்றும் அபிவிருத்திக்கான ஆலோசகர் பெட்றிக் மெக்கார்த்தி ஆகியோருக்கு இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடலானது நேற்று (08) திருகோணமலை (Trincomalee) ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.
முதலில் ஆளுநரை வாழ்த்திய பெட்றிக் மெக்கார்த்தி, இந்த வாரம் முழுவதும் கிழக்கு மாகாணத்திற்குள் விஜயம் செய்வதாகவும் தெரிவித்தார்.
நிலவும் காணிப்பிரச்சினை
தேர்தல் காலத்தின் அரசியல் இயக்கவியல் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், ஜனாதிபதி தேர்தலுக்கு பிந்திய தேர்தல் காலம் மிகவும் அமைதியான தேர்தல் காலம் எனவும், இந்த நாடாளுமன்ற தேர்தல் காலம் அமைதியாக இருப்பதாகவும் ஆளுநரிடம் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கிழக்கு மாகாணத்தில் நிலவும் காணிப்பிரச்சினை, மீள்குடியேற்றம், சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துதல் தொடர்பாக ஆளுநரிடம் தெரிவிக்கப்பட்டது.
சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம்கள் வாழும் இந்த கிழக்கு மாகாணத்தில் இனப்பிரச்சினைகள் அல்லது தேவையற்ற அரசியல் தலையீடுகளை அடிப்படையாக கொண்டு எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்பட மாட்டாது என ஆளுநர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் உள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குத் தேவையான அதிகபட்ச ஆதரவை வழங்குவதற்கு தாங்கள் செயல்பட்டு வருவதாகவும், நில ஆணைக்குழுவுக்குத் தேவையான தொழில்நுட்ப ஆதரவையும், தகவல் தொழில்நுட்ப முகாமைத்துவ அமைப்பை உருவாக்கத் தேவையான தொழில்நுட்ப ஆதரவையும் வழங்குவதற்கும் தாங்கள் தற்போது பணியாற்றி வருவதாக பெட்றிக் மெக்கார்த்தி தெரிவித்தார்.
அரசாங்கத்தின் மீது பொதுமக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்துவதே எமது முக்கிய பணிகளில் ஒன்று எனவும், இதன் மூலம் பல பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் எனவும் தெரிவித்த ஆளுநர், மாகாணத்தின் கல்வி, சுகாதாரம், சுற்றுலா, மக்களின் வாழ்க்கை தொடர்பிலும் விரிவாக கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |