புதுக்குடியிருப்பு நகரில் சுற்றுச்சூழல் சுகாதாரத்தை உறுதி செய்ய தொடர் நடவடிக்கை
புதுக்குடியிருப்பு நகரில் சுற்றுச்சூழல் சுகாதாரத்தை உறுதி செய்யும் நோக்கில், பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் டெங்கு ஒழிப்பு பணியாளர்கள் இணைந்து சுற்றுச்சூழல் சுகாதார பரிசோதனைகளை முன்னெடுத்துள்ளனர்.
புதுக்குடியிருப்பு நகரிலுள்ள புடவையகங்கள், அழகு சாதன விற்பனை நிலையங்கள் உள்ளிட்ட ஏனைய வியாபார நிலையங்களிலும், அவற்றைச் சூழவுள்ள பகுதிகளிலும் கடந்த 24ஆம் திகதி சுற்றுச்சூழல் சுகாதாரம் தொடர்பான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதன்போது, வீதியோரங்களிலும் வியாபார நிலையங்களின் சுற்றுப்புறங்களிலும் பொலித்தீன், பிளாஸ்டிக் பொருட்கள், பியர் போத்தல்கள் மற்றும் பியர் ரின்கள் உள்ளிட்ட கழிவுகளை சுகாதாரமற்ற முறையில் வீசியிருந்த இரண்டு வியாபார நிலையங்கள் அடையாளம் காணப்பட்டன.
வழக்குத் தாக்கல்
இதனைத் தொடர்ந்து, குறித்த இரண்டு வியாபார நிலையங்களுக்கு எதிராக கோம்பாவில் பொது சுகாதார பரிசோதகர் சுரேஸ் ஆனந்தனால் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

குறித்த வழக்குகள் நேற்றையதினம்(2) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், ஒரு வியாபார நிலையத்திற்கு 10,000 ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.
மற்றைய வியாபார நிலையத்தின் உரிமையாளர் நீதிமன்றத்தில் சமூகமளிக்காத காரணத்தால், அவரை எதிர்வரும் 02.10.2026 அன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
கோரிக்கை
இதேவேளை புதுக்குடியிருப்பு நகரின் சுற்றுச்சூழல் சுகாதாரத்தைப் பேணும் வகையில், பொது சுகாதார பரிசோதகர்கள் தொடர்ச்சியான கண்காணிப்பு மற்றும் சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

வியாபார நிலைய உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் சுற்றுச்சூழலை மாசுபடுத்தாமல், கழிவுகளை உரிய முறையில் அகற்றி நகரின் சுகாதாரத்தைப் பேணுவதற்கு ஒத்துழைக்குமாறும் அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
