புது மகிழ்வும், புது நிமிர்வும் புத்தாண்டின் வரவாகட்டும்! - டக்ளஸ் தேவானந்தா
நாளைய பொழுதுகளின் நம்பிக்கை ஒளியோடு பிறந்திருக்கும் புத்தாண்டின் வரவாக புது மகிழ்வும், புது நிமிர்வும் அமையட்டும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும், கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda) தெரிவித்துள்ளார்.
மேலும் அவரது புத்தாண்டு வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளதாவது,
இன்புற்ற வாழ்வின் மீதான விருப்பங்களே எல்லா மக்களினதும் நம்பிக்கை ஊற்று. கனவுகள் மெய்ப்படும், காரியங்கள் கைகூடும், பழையன கழிந்து, புதியன புகுந்து கண்ணெதிரே நல்ல காட்சிகள் அரங்கேறும். இவைகளே புத்தாண்டை கொண்டாடி மகிழும் மக்களின் எதிர்பார்ப்பு.
இன்று புதிதாய் பிறந்தோம் என சகல மக்களுடனும், நாமும் இணைந்து எண்ணத்தில் உறுதி கொண்டு புத்தாண்டை வரவேற்போம். அடுத்து வரும் தேர்தல் வெற்றியை குறி வைத்தே அங்குமிங்கும் அலைந்து பலரும் அடுத்த ஆண்டில் பிறந்து விடும் அரசியல் தீர்வென பொய்கள் நிறைந்த கதைகள் பலவும் பேசுவர்.
ஆனாலும், அடுத்து வரும் ஆண்டில் எமது மக்களின் கனவுகளில் முடிந்தளவு முனேற்றம் காணவே உழைப்போம். நாமென உறுதி கொண்டு உண்மையை மட்டும் பேசுகின்றோம். புத்தாண்டின் புது மகிழ்வையும், புது நிமிர்வையும் எவரும் தாம்பாள தட்டில் ஏந்தி எமது மக்களுக்கு தாமாக கொண்டு வந்து தரப்போவதில்லை.
மாறாக, எமது மக்களே தமது கனவுகள் நோக்கிய வெற்றியின் பாதையை தம் கைகளில் எடுக்க வேண்டும். அனுபவம், ஆற்றல், ஆளுமை நிறைந்த அரசியல் தலைமைக்கு போதிய ஆணை வழங்கி,அரசிலுரிமை, அபிவிருத்தி, அன்றாட இடர் தீர்ப்பு, இவைகள் மூன்றும் இணைந்த எமது மதி நுட்ப அரசியல் வழிமுறையை ஏற்று, எமது மக்கள் இன்னமும் அதிகமாக அணி திரண்டு வரவேண்டும்.
பிறக்கும் புத்தாண்டில் பழையன கழிதல் என்பது எமது மக்களை நீடித்த அவலங்களுக்குள் சிறை இருத்திய தவறான வழிமுறைகளையும் மறந்து போதல் அல்ல, இன்று வரை தொடரும், எதையும் எமது மக்களுக்கு பெற்றுத்தராத வெற்றுக்கூச்சல்களின் அனுபவங்களை எமது மக்கள் கற்றுத்தெளிதலே புதியன புகுதல் ஆகும்.
அனுபவங்களின் கருப்பையில் இருந்துதான் புதிய வரலாறுகள் பிறப்பெடுக்கின்றன. ஆண்டு மலர்வில் தமிழர் வாழ்வு மீண்டு நிமிரட்டும்.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பது போல் சகல மக்களும் சமவுரிமை பெற்று வாழட்டும் என தெரிவித்துள்ளார்.





Quartersகு செல்வதாக செந்தில் கூறிய விஷயம், பாண்டியனின் ஷாக்கிங் பதில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு புரொமோ Cineulagam
