சஜித் - த.மு.கூ. உடன்படிக்கை வரலாற்று மைல்கல்! மனோ கணேசன் எம்.பி. சுட்டிக்காட்டு
தமிழ் முற்போக்குக் கூட்டணியின் மலையக சாசனத்தை அடிப்படையாகக் கொண்ட சஜித் - த.மு.கூ. புரிந்துணர்வு உடன்படிக்கை, மலையக வரலாற்றில் ஒரு மைல் கல் என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.
நுவரெலியாவில் இன்று(12) நடைபெற்ற மலையக சாசனம் மற்றும் சஜித் - த.மு.கூ. புரிந்துணர்வு உடன்படிக்கை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
புரிந்துணர்வு உடன்படிக்கை
மேலும், அவர் கூறுகையில்,
"சஜித் மீது எனக்கு நம்பிக்கை இருக்கின்றது. அவருக்கு என் மீது நம்பிக்கை உண்டு. அதேபோல் திகாம்பரம், இராதாகிருஷ்ணன் ஆகியோருக்கும் அந்தப் பரஸ்பர நம்பிக்கைகள் உள்ளன.
இருந்தாலும் அரசியல் என்பது சமூகப் பொறுப்பு கொண்டது. ஆகவே, தனிப்பட்ட நம்பிக்கைகளுக்கு அப்பால் சென்று நாம் புரிந்துணர்வு உடன்படிக்கை செய்து கொண்டோம்.
இந்த உடன்படிக்கையில் சஜித் பிரேமதாச, நான், இராதாகிருஷ்ணன், திகாம்பரம், உதயகுமார் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளோம்.
எமது பரஸ்பர கையெழுத்துக்கள் மூலம் இந்த ஆவணம் அதிகாரபூர்வ அடையாளம் பெறுகின்றது.
இந்த ஆவணம் இன்று இங்கே உங்களுக்கு வழங்கப்படுகின்றது. இதன் மூலம் இது பகிரங்க ஆவணம் ஆகின்றது.
இலங்கை வரலாற்றில் ஈழத்தமிழ் உடன்பிறப்புகள் தொடர்பில் பண்டா - செல்வா, டட்லி - செல்வா ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
எம்மை கலந்தாலோசிக்காமலேயே இலங்கை - இந்திய அரசுகள் செய்து கொண்ட ஒப்பந்தம்தான், நமது மக்களை மந்தைகள் போல் பிரித்து கொண்ட சிறிமா - சாஸ்திரி ஒப்பந்தம் ஆகும்.
முதல் கையெழுத்து ஒப்பந்தம்
மலையக வரலாற்றில், ஜனாதிபதியாகும் வாய்ப்புள்ள இலங்கையின் பெரும் கட்சித் தலைவர் ஒருவருடன் நாம் செய்த முதல் கையெழுத்து ஒப்பந்தம் இதுவாகும். ஆகவே, இது ஒரு வரலாற்று மைல் கல் ஆகும்.
இதிலே, வரலாறு முழுக்க இலங்கை நாட்டுக்கு மலையக மக்கள் வழங்கிய பங்களிப்பு அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
குடியுரிமை, வாக்குரிமை பறிப்புகள் காரணமாக நமது வளர்ச்சி ஏனைய சமூகங்களுடன் ஒப்பிடும்போது குறை வளர்ச்சி கண்டுள்ளது ஏற்றப்பட்டுள்ளது.
ஆகவே, விசேட குறைதீர் சட்ட ஏற்பாடுகள் எமக்கு அவசியம் என்பதை ஏற்று உடன்பாடு காணப்பட்டுள்ளது.
எமது வாழ்வாதாரக் காணி உரிமை, வீட்டு காணி உரிமை, கல்வி உரிமை, சுகாதார உரிமை ஆகியவை தொடர்பில் உடன்பாடு காணப்பட்டுள்ளது.
விஞ்ஞானம், கணிதம், ஆங்கிலம், தொழில்நுட்பப் பாடங்களைத் தமிழில் கற்பிக்கும் விசேட ஆசிரியர் பயிற்சி கலாசாலை ஒன்றை ஸ்தாபிக்க உடன்பாடு காணப்பட்டுள்ளது.
எமது இளம் பெண்களுக்கான விசேட தாதியர் பயிற்சி கல்லூரி ஒன்றை ஸ்தாபிக்கவும் உடன்பாடு காணப்பட்டுள்ளது.
சஜித் ஆட்சி அமைந்தவுடன் அமைக்கப்படும் மலையக மக்கள் தொடர்பான ஜனாதிபதி செயலணிக்கு இந்தச் சஜித் - த.மு.கூ. புரிந்துணர்வு உடன்படிக்கையே அடிப்படையாக அமையும்." என அவர் குறிப்பிட்டுள்ளார்.