மனித உரிமைகள் எமக்குக் கொடுக்கப்படுகின்றனவா? - இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர், சிறையில் அடைபட்டு இருப்போர் எனப் பல வகையிலும் பல துன்பங்களுக்கு மத்தியிலும் வாழ்பவர்கள் எமது சமுதாயத்தில் இருக்கின்ற நிலையில் அவர்களுக்காகக் குரல் கொடுக்கின்றவர்கள் எம் மத்தியில் கட்டாயமாகத் தேவைப்படுகின்றார்கள் என மன்னார் மறைமாவட்ட ஆயர் கலாநிதி இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தெரிவித்துள்ளார்.
துணிச்சலுள்ள பெண்மணிக்கான சர்வதேச விருதினைப் பெற்ற மன்னாரைச் சேர்ந்த சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா வரவேற்கப்பட்டுக் கௌரவிக்கும் நிகழ்வு நேற்று மாலை மன்னார் நகர மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.
நேற்று மாலை 3 மணியளவில் மன்னார் பஸார் பகுதியிலிருந்து மாலை அணிவித்து இசை வாத்தியத்துடன் ஊர்வலமாகத் துணிச்சலுள்ள பெண்மணிக்கான சர்வதேச விருதினைப் பெற்ற மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா அழைத்து வரப்பட்டார்.
அதனை தொடர்ந்து நகர மண்டபத்தில் நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன. இதன்போது பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மன்னார் மறைமாவட்ட ஆயர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாங்கள் வாழும் இந்த காலத்திலே மனித உரிமைகள் எமக்குக் கொடுக்கப்படுகின்றனவா எனத் தேடிப் பார்க்கின்ற இக்கால கட்டத்தில் பல விதமான பிரச்சினைகள் தான் எழுகின்றன.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர், சிறையில் அடைபட்டு இருப்போர் எனப் பல வகையிலும் பல துன்பங்களுக்கு மத்தியிலும் வாழ்பவர்கள் எமது சமுதாயத்தில் இருக்கின்றார்கள்.
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பாக மன்னார் மறைமாவட்டத்தின் ஓய்வு நிலை ஆயர் எம்மிடம் இருந்து மறைந்த மேதகு பேரரூட் கலாநிதி இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை மரணித்ததன் பின்னர் ஊடகங்களின் ஊடாக தொடர்ச்சியாக வெளியிடப்பட்ட பல்வேறு செய்திகள் ஊடாக ஆயர் மக்களுக்காக எப்படி உரிமைகளுக்காகப் போராடினார்.
அவர்களுடைய பிரச்சினைகளைச் சொல்லிக்கொள்ள முடியாத நிலையில் அவர் அவர்களுக்காகப் பேசினார் என்பதை நாங்கள் அறிந்து கொண்டோம். அப்படியான நிலையில் மன்னாரில் எங்களுக்கு இருந்த ஒரு தலைவன் இரண்டு வாரங்களுக்கு முன் மறைந்து விட்டார்.
எங்கள் சமுதாயத்திலே மக்களுக்காக வாதாடுகின்றவர்கள், மக்களினுடைய பிரச்சினைகளை அறிந்து அவர்களுக்காகக் குரல் கொடுக்கின்றவர்கள் கட்டாயமாகத் தேவைப்படுகின்றார்கள்.
அந்த வகையிலே சட்டத்தரணி திருமதி ரனித்தா ஞானராஜா இந்த இளம் வயதில் அவருடைய கெட்டித்தனத்தினால் இந்த மக்களுக்காகக் குரல் கொடுத்துத்தான் துணிச்சலுள்ள பெண்மணிக்கான சர்வதேச விருதினைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
எனவே மன்னார் மாவட்டம் குறித்த விருது தொடர்பில் மகிழ்ச்சி அடைய வேண்டும். எங்கள் மத்தியில் ஒரு சட்டத்தரணி சமூக ரீதியிலே சிந்தித்து மக்களுக்காகக் குரல் கொடுத்து மக்களின் உரிமைகளைப் பெற்றுத்தரத் தயாராக இருக்கின்றார் என்பதைக் கண்டு நாங்கள் இறைவனுக்கு நன்றி கூறுகின்றோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்தநிகழ்வில் பிரதம விருந்தினராக மன்னார் மறைமாவட்ட ஆயர் கலாநிதி இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை கலந்து கொண்டதோடு, சர்வ மத தலைவர்கள், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், எஸ்.வினோ நோகராதலிங்கம், சாள்ஸ் நிர்மலநாதன், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் திணைக்கள அதிகாரிகள் , மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் பெண்கள் அமைப்பு எனப் பலர் கலந்து கொண்டனர்.







இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
2007ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த அழகிய தமிழ் மகன், வேல், பொல்லாதவன் படங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam
பாகிஸ்தானின் அணுசக்தி நிலையத்தை தாக்க இந்தியா-இஸ்ரேல் ரகசிய திட்டம்: CIA அதிகாரி வெளியிட்ட தகவல் News Lankasri