வடக்கு மாகாணத்தில் மன்னாருக்கு தனிச்சிறப்பு உண்டு: அரசாங்க அதிபர் பெருமிதம்
இலங்கையின் வடக்கு மாகாணத்தில் ஏனைய மாவட்டங்களை விட மன்னார் மாவட்டத்திற்கு என ஒரு சிறப்பு காணப்படுவதோடு பல மதங்கள் ஒற்றுமையுடன் வாழ்கின்ற ஒரு மாவட்டமாக மன்னார் மாவட்டம் திகழ்கிறது என மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் கே.கனகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மன்னார் - புதுக்குடியிருப்பு முகைதீன் ஜும்மா பள்ளியில் நேற்று (03.04.2024) நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்வு புதுக்குடியிருப்பு முகைதீன் ஜும்ஆ பள்ளி நிர்வாகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றுள்ளது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
சர்வ மதங்களை சேர்ந்தவர்கள்
மேலும் தெரிவிக்கையில், “இலங்கை பல்லின மக்களையும் பல மொழிகளை பேசுகின்றவர்களையும் கொண்டுள்ள ஓர் அழகிய நாடாக உள்ளது.
இலங்கையின் வடக்கு மாகாணத்தில் ஏனைய மாவட்டங்களை விட மன்னார் மாவட்டத்திற்கு என ஒரு சிறப்பு காணப்படுகின்றது.
மன்னார் மாவட்டத்தில் சர்வ மதங்களை சேர்ந்தவர்கள் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். இலங்கையில் அனைத்து மக்களுக்கும் சமமான அந்தஸ்து கொடுக்கப்பட்டுள்ளது.என்று இலங்கை ஜனநாயக குடியரசின் அரசியல் அமைப்பில் கூறப்படுகிறது” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்வில் மன்னார் பிரதேசச் செயலாளர், ,அருட்தந்தையர்கள், இஸ்லாமிய மத தலைவர்கள், பொலிஸ் அதிகாரிகள், அனைத்து கிராமங்களின் நிர்வாகிகள், கிராம மக்கள் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.