போதைப்பொருள் குற்றச்சாட்டில் 2019ஆம் ஆண்டு கைதான நபருக்கு வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு
கிளிநொச்சியில் போதைப்பொருள் விற்பனை செய்த குற்றச்சாட்டில் 2019ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட நபருக்கு தொண்ணூறாயிரம் ரூபா தண்டப்பணம் விதித்து கிளிநொச்சி மேல் நீதிமன்றம் தீர்பளித்துள்ளது.
குறித்த தீர்ப்பானது, நேற்றைய தினம் ( 12.03.2024) கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றில் வழங்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி - பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 6ஆம் திகதி 1.151கிராம் அளவிலான போதைப்பொருளினை உடைமையில் வைத்திருந்த மற்றும் விற்பனை செய்ததன் குற்றச்சாட்டில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை
இதற்கமைய, கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றில் பொலிஸாரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வந்துள்ளன.
இந்நிலையிலேயே, நேற்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு கொண்டு வரப்பட்டு குறித்த அளவுடைய போதைப்பொருள் உடைமையில் வைத்திருந்த குற்றத்திற்காக நாற்பதாயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டதுடன் பதினைந்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட நான்கு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், போதைப்பொருள் விற்பனை செய்த இரண்டாம் குற்றச் சாட்டுக்கு ஐம்பதாயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டதுடன் முதலாவது குற்றச்சாட்டுக்கான தண்டனைபோன்று பதினைந்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |