அதிர்ஷ்டமாக கிடைத்த பெருந்தொகை பணத்துடன் சென்ற தமிழ் இளைஞன் விபத்தில் பலி
தென்னிலங்கையில் லொத்தர் சீட்டிழுப்பில் 10 லட்சம் ரூபாய் பணப்பரிசை வென்ற இளைஞன், குறித்த பணத்துடன் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்த போது ஏற்பட்ட விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
ஹொரண - பொக்குணுவிட்ட, வெலிகம்பிட்டிய பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக ஹொரணை பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் கிரியெல்ல பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய சண்முகம் ஆனந்த என்பவரே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இளைஞன் விபத்தில் பலி
உயிரிழந்த நபர் தனது நண்பரான 24 வயதுடைய இளைஞனுடன் மோட்டார் சைக்கிளின் பின் இருக்கையில் பயணித்துக் கொண்டிருந்தபோதே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
குறித்த இருவரும் கொழும்பில் இருந்து ஹொரண நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த போது, மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி அருகில் இருந்த பாலத்தின் மதிலுடன் மோதியுள்ளது.
மோதிய வேகத்தில் தூக்கி வீசப்பட்டதில் பின்னால் அமர்ந்து சென்ற நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்தில் படுகாயமடைந்த 24 வயதுடைய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர், ஹொரண மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவர் தற்போது தீவிர சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.