இலங்கைக்கு உதவுங்கள்! சர்வதேசத்திடம் மைத்திரி விடுத்துள்ள வேண்டுகோள்
இலங்கையின் பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க உதவுமாறு மைத்திரிபால சிரிசேன சர்வதேசத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஆசிய பசிபிக் சமாதான மன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உலக சமாதான சபையின் வருடாந்த மாநாடு தற்போதைக்கு பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகர் மணிலாவில் நடைபெற்று வருகின்றது.
இதன் சிறப்பு அதிதியாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்ட வேண்டுகோளை விடுத்துள்ளார்.
நாட்டிற்கு உதவ முன்வருமாறு வேண்டுகோள்
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
இலங்கையானது தற்போதைக்கு பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கிக் கொண்டுள்ளது.சுமார் 6.5 மில்லியன் மக்கள் மூன்று வேளை உணவுக்கு வழியின்றி பட்டினியில் வாடத் தொடங்கியுள்ளனர்.
சிவில் யுத்தம் முடிவுற்றதன் பின்னர் அரசியல் நிலைமைகளை உரிய முறையில் முகாமைத்துவம் செய்து கொள்ளத் தவறியமையும் இதற்கு ஒரு காரணமாகும்.
இந்நிலையில், இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி என்ற வகையில் எங்கள் நாட்டுக்கு உதவ முன்வருமாறு உங்கள் அனைவரிடமும் வேண்டுகோள் விடுக்கின்றேன் என்றும் மைத்திரி தனது உரையில் தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளார்.