மகிந்தவின் மனைவிக்கு ஏற்பட்டுள்ள சிக்கல் - அம்பலமாகவுள்ள மோசடிகள்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ நடத்தும் சிறிலிய சவிய அமைப்புக்கு பணம் வரவு வைக்கப்பட்டமை தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் மேற்கொள்ளப்பட்ட இந்த விசாரணைகளின் அறிக்கைகளை, மாற்றுத் தரப்பினர் பெற்றுக்கொள்ளும் முயற்சிகள் குறித்தும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்காக கொள்ளுப்பிட்டியில் பிரசார அலுவலகம் ஒன்று நடத்தப்படுகின்றது. அங்கிருக்கும் பலர் இது தொடர்பான அறிக்கைகளை பெற்றுக்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவே தகவல் வெளியாகியுள்ளது.
பணப் புழக்கம்
தற்போது வெளியாகியுள்ள தகவலுக்கமைய, சபாநாயகராக இருந்த சமல் ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்திற்குச் சென்று குற்றப் புலனாய்வு திணைக்களம் பெற்றுக் கொண்ட வாக்குமூலம் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
மைத்திரி - ரணிலின் கூட்டு ஆட்சியின் ஆரம்பத்திலேயே ஷிரந்தி ராஜபக்சவின் சிறிலிய சவிய அமைப்புக்கு பணப் புழக்கம் தொடர்பாக பல சர்ச்சைக்குரிய தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்தநிலையில், அந்த தகவல்கள், ரணிலின் பிரசார நடவடிக்கையில் ஈடுபடும் தரப்பினருக்கு விரைவில் வழங்கப்படலாம் என கொழும்பு அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.