பரபரப்பாகும் தென்னிலங்கை அரசியல்! கடும் பீதியில் ராஜபக்ச குடும்பம், அரசியல் நட்புகள்
கடந்த ஆட்சியின் போது ராஜபக்சர்கள் மற்றும் அவர்களது நெருங்கிய அரசியல் நண்பர்களுக்கு எதிராக மீளப்பெறப்பட்ட வழக்குகளை மீண்டும் விசாரிக்கும் நடவடிக்கையை சமகால அநுர அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது.
இந்நிலையில், பாரிய மோசடிகளில் இருந்து தப்பித்துக் கொண்டவர்கள் மீண்டும் சட்ட ரீதியாக சிக்கி சிறைக்கு செல்லும் நிலையில் உள்ளதால், அவர்கள் கடும் அச்சத்தில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான ராஜபக்ச குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராக 2015 – 2016ஆம் ஆண்டுகளில் குறைந்தது 14 வழக்குகள் தொடரப்பட்டு, பின்னர் தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக மீளப் பெறப்பட்டிருந்தன.
மகிந்த உட்பட ராஜபக்ச குடும்பத்தினர்
அத்துடன், அக்குடும்பத்தின் நெருங்கிய நட்பு வட்டார உறுப்பினர்கள் தொடர்பிலும் அதே காலகட்டத்தில் குறைந்தது 15 வழக்குகள் தொடரப்பட்டு மீளப் பெறப்பட்டிருந்தன.

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தொடர்பில் தொடரப்பட்டிருந்த 5 வழக்குகளை மீண்டும் தொடுக்குமாறு நேற்று மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அவரது 5 வழக்குகளுக்கு மேலதிகமாக, கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு எதிராக 3 வழக்குகளும், ரோஹித அபேகுணவர்தன, பிரியங்கர ஜயரத்ன, தம்மிக பெரேரா மற்றும் நிஸ்ஸங்க சேனாதிபதி ஆகிய ராஜபக்ச குடும்பத்தின் நெருங்கிய நண்பர்களுக்கு எதிராக தொடரப்பட்டிருந்த வழக்குகளும் மீளப் பெறப்பட்டிருந்தன.
சொத்துக் குவிப்பு வழக்கு
மேலும், கோட்டாபய ராஜபக்ச தொடர்பில் சொத்துக் குவிப்பு வழக்கும், மகிந்த ராஜபக்ச மீது சொத்துக் குவிப்பு வழக்கும், பசில் ராஜபக்ச மீது 5 சொத்துக் குவிப்பு வழக்குகளும், பொதுச் சொத்து துஷ்பிரயோகம் தொடர்பில் ஒரு வழக்கும் தொடரப்பட்டு மீளப் பெறப்பட்டுள்ளன.

நாமல் ராஜபக்ச மீது 4 சொத்துக் குவிப்பு வழக்குகளும், ரோஹித ராஜபக்ச தொடர்பில் சொத்துக் குவிப்பு வழக்கும், கடற்படையில் சட்டவிரோதமாக இணைத்துக் கொள்ளப்பட்டு மக்கள் நிதி பயன்படுத்தப்பட்டது தொடர்பான மற்றுமொரு வழக்கும் எனத் தொடரப்பட்டிருந்த வழக்குகள் மீளப் பெறப்பட்டிருந்தன.
இவ்வாறு மீளப் பெறப்பட்ட வழக்குகளை மீண்டும் தொடுக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், இவர்கள் அனைவரும் குழப்பமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.