ஹரக் கட்டாவிடம் பெற்ற பெருந்தொகை இலஞ்சப் பணத்தில் சொகுசு வாழ்க்கை..! வெளிவரும் அதிர்ச்சித் தகவல்
“ஹரக் கட்டா” என அழைக்கப்படும் நந்துன் சிந்தக விக்ரமரத்ன தரப்பில் இருந்து பெற்றுக் கொண்ட பெருந்தொகை இலஞ்சப் பணத்தைக் கொண்டு சந்தேக நபர்கள் ஆடம்பர வாழ்க்கை அனுபவித்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
விசாரணைகளிலிருந்து சலுகை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்களுக்காக, ஹரக் கட்டாவின் மனைவியிடமிருந்து 120 மில்லியன் ரூபாயை இலஞ்சமாகப் பெற்ற முன்னாள் நீதி அமைச்சரின் புதல்வர் ரகித ராஜபக்ச உள்ளிட்டோர் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளது.
இலஞ்சப் பணம்
முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் புதல்வரும், சட்டத்தரணியுமான ரகித ராஜபக்ச, ஐக்கிய மக்கள் சக்தியின் ஹொரணை தொகுதி அமைப்பாளர் சரித் அபேசிங்க, மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் முன்னாள் பணிப்பாளரான அருண வருண ஹெண்த்ரிகே, ஆகியோர் தொடர்பில் குறித்த சம்பவத்தில் தொடர்புப்பட்டுள்ளனர்.

ஹரக் கட்டாவுக்கு வழக்குகளில் இருந்து சலுகைகள் வழங்குதல், தடுப்புக் காவல் உத்தரவை ரத்துச் செய்தல், பூசா அதியுயர் பாதுகாப்புச் சிறைச்சாலையில் இருந்து வேறொரு சாதாரண சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்தல் உள்ளிட்ட விடயங்களுக்காக சந்தேக நபர்கள் ஆரம்பத்தில் 500 மில்லியன் ரூபா தொகையை இலஞ்சமாக கோரியுள்ளனர்.
அதன் பின்னர் பேச்சுவார்த்தைகள் மூலம் 300 மில்லியன் ரூபாவாகவும், இறுதியாக 200 மில்லியன் ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் அந்தத் தொகையில், 12 கோடி ரூபாயை முன்பணமாகக் கோரியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, இந்தத் தொகை முதல் நாள் 10 கோடி ரூபாயாகவும், மறுநாள் 2 கோடி ரூபாயாகவும் ஐக்கிய அரபு இராச்சிய நாணயமான திர்ஹம்களில் வழங்கப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஊழல் மோசடி விசாரணை
குறித்த இலஞ்சப் பணத்தை உண்டியல் முறை வழியாக நாட்டிற்குள் கொண்டு வந்த பின்னர், சந்தேக நபர்கள் ஒருவிதமான ஆடம்பர நுகர்வுப் பழக்கத்துக்கு மாறியுள்ளனர் என்றும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், மூன்றாவது சந்தேக நபரான அருண வருண ஹெண்த்ரிகே, 2024-ஆம் ஆண்டில் “பிஎம்டபிள்யூ” ரக சொகுசு கார் ஒன்றை வாங்கியதோடு, தனது வீட்டையும் உயர் தரத்தில் ஆடம்பர வசதிகளுடன் புதுப்பித்துள்ளார்.

இதேவேளை, முதல் சந்தேக நபரான சரித் அபேசிங்கவும் 2024-ஆம் ஆண்டில் “ரேஞ்ச் ரோவர்” உயர் ரக சொகுசு ஜீப் ஒன்றை வாங்கியதோடு, கஹத்துடுவ பகுதியில் ஒரு நவீன வீட்டையும் கட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைக்கு இலஞ்சம், ஊழல் மற்றும் மோசடிகளை விசாரணை செய்வதற்கான ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ள மேற்குறித்த மூன்று சந்தேக நபர்களும் எதிர்வரும் ஜுலை மாதம் 03ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Aanadhi அவரால் எழுதப்பட்டு, 26 June, 2026 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.