வலுவிழந்துள்ள பெங்கால் புயல்!
தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் கடந்த 23 ம் திகதி தோன்றிய தாழமுக்கம் பெங்கால் புயலாக மாறி இன்று பிற்பகல் முழுமையாக கரையைக் கடந்து தற்போது வலுவிழந்துள்ளதாக யாழ். பல்கலையின் புவியியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
இந்த புயலின் நகர்வில் இரண்டு சந்தர்ப்பங்களில் எனக்கு ஒருவித அச்ச நிலை இருந்தது. கடந்த 25 ம் திகதி இரவும் 27ம் திகதி காலையும் இந்த உணர்வு இருந்தது. ஏனெனில் 25 ம் திகதி அம்பாறையில் கரையைக் கடப்பது போன்றும் 27ம் திகதி முல்லைத்தீவில் கரையைக் கடப்பது போன்றும் மாதிரிகள் காட்டியிருந்தன.
ஆனாலும் தெய்வாதீனமாக அவ்வாறு நடக்கவில்லை. ஏனெனில் அது மேற்குறிப்பிட்ட இடங்களில் கரையைக் கடந்திருந்தால் கற்பனை செய்ய முடியாத பாதிப்புக்களை ஏற்படுத்தியிருக்கும்.
தாழமுக்கத்தின் மையப்பகுதி
இந்த தாழமுக்கத்தின் மையப்பகுதி வளிமண்டல அமுக்கம் 11 தடவைகள் மாற்றமடைந்தது. 05 தடவைகள் குறைந்து பின் கூடியது. 04 தடவைகள் பல மணித்தியாலங்கள் அசைவற்று நின்றிருந்தது.
இறுதியாக கரையைக் கடக்கும் போது கூட 08 மணித்தியாலங்கள் அசைவற்று இருந்தது. நகர்ந்த திசை முற்றிலும் வித்தியாசமாக இருந்தது. வேகமும் பல ஏற்றத்தாழ்வுகளைக் கொண்டிருந்தது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில உயிரிழப்புக்கள் ஏற்பட்டிருக்கின்றன.
பெரும் சொத்தழிவுகள் ஏற்பட்டுள்ளன. பலர் இடம்பெயர்ந்துள்ளனர். வீடுகள் மற்றும் பணியிடங்களில் வெள்ளநீர் புகுந்தமையால் பலர் அசௌகரியத்துக்குள்ளாகியுள்ளனர். ஆனாலும் ஒப்பீட்டு ரீதியில் எதிர்பார்த்ததை விட பாதிப்புக்கள் குறைவென்றே கருதலாம்.
இதற்கு இப் புயல் தொடர்பான முன்னெச்சரிக்கைகள், தயார்ப்படுத்தல்கள், மீட்பு நடவடிக்கைகள், சகல அரச திணைக்களங்களின் அதியுச்ச பேரிடர் கால செயற்பாடுகள், எல்லாவற்றுக்கும் மேலாக மக்களின் அபரிமிதமான ஒத்துழைப்பு போன்றன இப்புயலின் தாக்கத்தை எமக்கு குறைத்துள்ளது.
நான் கடந்த 16.11.2024 அன்றே 23.11.2024 அன்று தாழமுக்கம் உருவாகும் என குறிப்பிட்டிருந்தேன். அன்றிலிருந்து அதனை தொடர்ச்சியாக அவதானித்து வந்தேன். அது தொடர்பான முன்னறிவிப்புக்களை வழங்கியிமிருந்தேன்.
முன்னறிவிப்பு
மிகக் குறுகிய கால இடைவெளிகளில் முன்னறிவிப்பை வழங்க வேண்டும் என எண்ணியிருந்தேன். ஆனாலும் என்னுடைய வேலைப்பளு அதற்கு இடம் கொடுக்கவில்லை. ஆனாலும் உரிய காலப்பகுதிகளில் முன்னறிவிப்பை மேற்கொண்டேன் என்பது மனதுக்கு திருப்தி. என்னுடைய பதிவை பலர் பகிர்ந்திருந்தீர்கள்.
அதன் மூலம் இந்த புயல் தொடர்பான இற்றைப்படுத்தல்களை பலர் உடனுக்குடன் அறிய உதவியது. பலர் உற்சாகப்படுத்தும் கருத்துக்களை இட்டீர்கள். பலர் உங்கள் விருப்பங்களை தெரிவித்து ஆதரவளித்திருந்தீர்கள்.
இது போன்ற பேரிடர் நெருக்கடி காலத்தில் இது போன்ற உங்களின் செயற்பாடுகள் பல வழிகளிலும் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த உதவியிருக்கும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |