உள்ளுராட்சி தேர்தல் முடிவின் நிச்சயமற்ற தன்மை சர்வதேச நாணய நிதியக்கடனை தாமதப்படுத்தலாம்! அரசியல் ஆய்வாளர்கள்
இலங்கையின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் நடைபெற்றால், அது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பொருளாதாரச் சீர்திருத்தங்களையும், சர்வதேச நாணய நிதியக் கடனையும் தாமதப்படுத்தி தடம் புரளச்செய்யும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் 225 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தால் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்க, சர்வதேச நாணய நிதியத்தின் கடனை இலக்காகக்கொண்டு, அதிக வரி வருமானம், ஓய்வூதியக் குறைப்பு மற்றும் சில கடுமையான மற்றும் அரசியல் ரீதியாக பொது மக்கள் விரும்பாத சீர்திருத்தங்களை முன்மொழிந்தார்.
போராட்டங்களை முன்னெடுப்பதாக எச்சரிக்கை
இதன் காரணமாக, அரசத்துறை தொழிற்சங்கங்கள் போராட்டங்களை ஆரம்பிக்கப்போவதாக அச்சுறுத்தியுள்ளன.
இந்தநிலையில் நாட்டின் தேர்தல்கள் ஆணைக்குழு, உள்ளூராட்சி தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஜனவரி 18 முதல் 21 வரை ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளது.
தேர்தல் நடத்தப்பட்டு அரசாங்கம் தேர்தலில் மோசமாகத் தோற்றால், சீர்திருத்தங்கள் உட்பட அதன் அனைத்துக் கொள்கைகளும் தகர்ந்துப்போகும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
அத்துடன் அது, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சட்டபூர்வமான தன்மை மற்றும் ஆணையை மேலும் கேள்விக்கு உட்படுத்தும் என்றும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இது 2018 இல் நடந்ததை விட மோசமாக இருக்கும் என்று அவர்கள் எச்சரித்துள்ளனர்.
2018ஆம் ஆண்டு உள்ளுராட்சி தேர்தல்
2018ஆம் ஆண்டு உள்ளுராட்சி தேர்தலின்போது மகிந்த ராஜபக்சவின் கட்சி, பாரிய வெற்றியை பெற்றது. இது, அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்த மைத்ரிபால- ரணில் ஆட்சிக்கு தடையாக அமைந்ததை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இது போன்று, தற்போது உள்ளூராட்சி தேர்தல் நடைபெற்று அதில் ஆளும் கட்சி பாரிய தோல்வியை தழுவினால், ஆளும் கட்சியுடன் பொதுமக்கள் இல்லை என்பதற்கான சமிக்ஞையாக அது அமைந்து விடும்.
இது, ஜனாதிபதிக்கு பாரிய பின்னடைவாக அமைந்துவிடும் என்றும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். எவ்வாறாயினும், சில அரசியல் ஆய்வாளர்கள் கிராமப்புறங்களில் ஆளும் கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றிபெற முடியும் என்று நம்புகின்றனர்.
உள்ளூராட்சி தேர்தல்களின் இயக்கவியல், நாடாளுமன்றத் தேர்தல்களில் இருந்து வேறுபட்டது. நாடு முழுவதும் ஊழல் நிறைந்த அரசியல் தொகுதிகள் உருவாக்கப்பட்டுள்ளமையால், அது, ஆளும் கட்சிக்கு உதவக்கூடும் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இந்தநிலையில் உள்ளுராட்சி தேர்தல் முடிவின் நிச்சயமற்ற தன்மையானது, சர்வதேச நாணய நிதியக்கடனை தாமதப்படுத்தலாம். எனவே அடுத்த இரண்டு வருடங்களுக்கு ரணில் விக்ரமசிங்கவின் சீர்திருத்த நிகழ்ச்சி நிரலை நிலைநிறுத்துவதற்கு அரசியல் ஸ்திரத்தன்மை முக்கியமானது என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
உள்ளூராட்சி தேர்தலாக இருந்தாலும், அது, ஜனாதிபதியின் கொள்கைகளுக்கு
பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு இருக்கிறதா என்பதை வெளிக்காட்டும் தேர்தலாகவே
அமையும்
இதில் அவரது அரசாங்கம் பலத்த தோல்வியை சந்தித்தால், எதிர்க்கட்சிகள் பொதுத்
தேர்தலைக் கோரி வீதியில் இறங்கும் சந்தர்ப்பமும் உள்ளது என்று
எதிர்வுகூறப்பட்டுள்ளது.