ஈஸ்டர் தாக்குதல் தகவல் வழங்கிய முஸ்லிம் நபருக்கு கொலை அச்சுறுத்தல்!!
2019 ஏப்ரல் இடம்பெற்ற ஈஸ்டர் குண்டு வெடிப்பு சம்பவங்களின் சூத்திரதாரிகள் பற்றிய தகவல்களை வழங்கிய காத்தான் குடியைச் சேர்ந்த ஒரு நபருக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட சம்பவம் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இடம்பெற்றுள்ளது.
ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களின் பின்னால் இருந்த செயற்பட்ட சூத்திரதாரிகள் என்று இலங்கையிலும், வெளிநாடுகளிலும் சில இஸ்லாமிய அடிப்படைவாதிகள் காவல்துறையினரிடம் அடையாளம் காண்பிக்கப்பட்டிருந்தார்கள்.
காத்தான்குடியைச் சேர்ந்த சாமாதானத்தை விரும்பும் ஒரு இஸ்லாமியரே அவர்களை அடையாளம் காட்டியிருந்தார்.
அவ்வாறு அடையாளம் காட்டிய நபருக்கே தற்பொழுது உயிரச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்களை மேற்கொண்ட தரப்புக்கள் தொடர்ந்தும் செயற்திறனுடன் இயங்கி வருவதாகவும், அவர்கள் அரேபிய நாடுகளிடம் இருந்து பெரும் தொகைப் பணத்தைப் பெற்று காணிகளை கொள்வனவு செய்து, வியாபாரங்களை, அமைப்புக்களை நடாத்தி செயற்பட்டு வருவதாகவும், 'கிழக்கிஸ்தான்' என்றொரு ஆட்சியை அமைக்க அவர்கள் திட்டமிட்டு வருவதாகவும் தகவல்வழங்கிய அந்த நபர், அதற்கான ஆதாரங்களையும் வழங்கியுள்ளார்.
அந்த முறைப்பாடுகள், ஆதாரங்களை அவர் சிறிலங்கா காவல்துறையினரிடமும், ஜனாதிபதி ஆணைக்குழுவினரிடமும் வழங்கியிருந்தார்.
குறிப்பிட்ட சிலர் மதத்தின் பெயரால் செய்யும் காரியங்கள் ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகத்தையே பாதிக்கும் என்ற காரணத்தினால்தான் தான் அந்த தகவல்களை அரசாங்கத்திற்கு வழங்கியதாகத் தெரிவிக்கும் அந்த நபர், தற்பொழுது சமூகவலைத்தளங்கள் ஊடாகவும், தொலைபேசி ஊடாகவும் தனக்கு தொடர்ச்சியாக கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டுக்கொண்டிருப்பதாக தெரிவித்தார்.
இது தொடர்பான முறைப்பாடுகள் சிறிலங்கா காவல்துறையினரிடம் மேற்கொண்டுள்ளதாகவும், அவர்கள் விசாரணைகளை மேற்கொண்டுவருவதாகவும் தெரிவிக்கும் அந்த நபர், தானது உயிரைப் பாதுகாக்கவேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கும், சமாதானத்தை விரும்புகின்றவர்களுக்கும் உள்ளது என்றும் தெரிவித்தார்.
