யாழில் ஊடகவியலாளர் வீடு மீது தாக்குதல்: ஐ.நாவுக்கு அனுப்பப்பட்ட கடிதம்
யாழ்ப்பாணத்தில் (Jaffna) ஊடகவியலாளர் வீடு மீது தாக்குதல் நடாத்தி வாகனங்களுக்கு தீ மூட்டிய சம்பவம் தொடர்பில் நீதியான விசாரணைகளை உறுதிப்படுத்தக்கோரி ஐக்கிய நாடுகள் சபையின் (United Nations) பொதுச்செயலாளருக்கு கடிதமொன்று தயாரித்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த கடிதம் யாழ்ப்பாணத்தில் உள்ள சர்வதேச புலம்பெயர் அமைப்பின் அலுவலகத்தில் கையளிக்கப்பட்டதுடன் ஜனாதிபதிக்குரிய கடிதம் வடக்கு மாகாண ஆளுநருக்கு கையளிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கடிதத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ச.சுகிர்தன், தமிழீழ விடுதலை இயக்கத்தின் பேச்சாளர் குருசாமி சுரேந்தின், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் தீபன் திலீசன், தமிழ்த்தேசிய பசுமை இயக்க தலைவர் பொ.ஐங்கரநேசன், மாக்சிச லெனினிசக்கட்சி தலைவர் சி.க.செந்திவேல், ஊடக கல்வியாளர் கலாநிதி தே.தேவானந், திருநர்களின் சார்பில் ஏஞ்சல் குயின்ரஸ், குரலற்றோரின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கோமகன் உள்ளிட்ட அரசியல் மற்றும் சிவில் சமூகத்தினர் கையொப்பமிட்டுள்ளனர்.
அந்தக் கடித்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக, இலங்கையின் வடக்கில் ஊடகவியலாளர்களுக்கு எதிராக எண்ணற்ற தாக்குதல்கள், கொலைகள் மற்றும் அச்சுறுத்தல்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த சம்பவங்கள் நடந்தாலும், முறையான விசாரணை மற்றும் பொறுப்புக்கூறல் நடைபெறவில்லை. இந்த தொடர்ச்சியான வன்முறை மற்றும் தண்டனையின்மை பல முக்கியமான சிக்கல்களை முன்னிலைப்படுத்தியுள்ளது.
இலங்கையில் குறிப்பாக வடக்கு பிராந்தியத்தில் ஊடகவியலாளர்களுக்கு எதிராக அதிகரித்து வரும் வன்முறைகள் குறித்து கீழே கையொப்பமிட்டுள்ள நாங்கள் உங்களுக்கு மிகுந்த கவலையுடன் எழுதுகிறோம்.
பத்திரிகை சுதந்திரம் என்பது ஜனநாயகத்தின் முக்கியமான தூணாக உள்ளது, அது சர்வதேச சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்படும் அடிப்படை மனித உரிமையாகவும் உள்ளது.
துரதிஷ்டவசமாக, இலங்கையில் குறிப்பாக வடக்கில் உள்ள ஊடகவியலாளர்கள் அதிகரித்து வரும் அச்சுறுத்தல்கள், துன்புறுத்தல்கள் மற்றும் வன்முறைகளை எதிர்கொள்கின்றனர்.
இது யுத்ததத்தினால் பாதிக்கப்பட்ட சமூகத்தில் பாதிக்கப்பட்ட மக்களிற்காக அவர்கள் ஆற்றவேண்டிய பணியை அச்சுறுத்தலுக்குள்ளாக்குவதோடு சுயதணிக்கைக்கும் வழிவகுக்கின்றது.
இனந்தெரியாத நபர்கள் ஊடகவியலாளர்களைக் குறிவைப்பதால் அவர்கள் ஒருவகையான இனம்புரியாத அச்ச உணர்வில் வாழ்கிறார்கள், அவர்களால் தமது ஜனநாயகக் கடமையை செய்ய முடியவில்லை. இதனை தங்கள் மேலான கவத்துக்கும் நடவடிக்கைக்காகவும் கொண்டுவருகின்றோம்.
பின்னணி
கடந்த மூன்று தசாப்தங்களாக, இலங்கையில் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள் கவலையளிக்கும் வகையில் அதிகரித்து வருகின்றன. இந்தத் தாக்குதல்களில் ஊடக நிறுவனங்கள் மீதான தாக்குதல்கள், ஊடகவியலாளர் மீதான உடல்ரீதியான தாக்குதல்கள், கடத்தல்கள், மிரட்டல்கள், உடமைகளை சேதமாக்குதல், உறவினர்களை மிரட்டுதல், உயிர் ஆபத்து அச்சத்தை உருவாக்குதல், கொலைகள் என்பன அடங்கும்.
இந்தக் குற்றங்களைச் செய்பவர்கள் பெரும்பாலும் தண்டனையின்றி தப்பித்து சுதந்திரமாக தொடர்ந்து செயல்படுகிறார்கள், இதனால் பல ஊடகவியலாளர்கள் அச்ச உணர்வில் வாழ்கிறார்கள், சிலர் நாட்டைவிட்டு வெளியேறியிருக்கிறார்கள். இதனால் நாட்டின் ஜனநாயகப்பணிக்கு தொடர்ந்து இடையூறு விளைவிக்கப்படுகின்றது.
பாதிக்கப்பட்டவர்களுக்காக குரல் கொடுத்தல், ஊழலை வெளிப்படுத்தல், மனித உரிமை மீறல்களை அறிக்கையிடுதல், பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளை மக்கள்சார்பாக வெளிப்படுத்தல் பணிக்காக வட இலங்கையில் ஊடகவியலாளர்கள் குறிவைக்கப்பட்டுள்ளனர். இதனால் அவர்கள் உடல்ரீதியான தாக்குதல்கள் மற்றும் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டுள்ளனர். இதற்கு அண்மைய சமபவம் சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது.
வட இலங்கையில் உள்ள ஊடகவியலாளர் பிரதீபனின் வீடு, இனந்தெரியாத நபர்களால் யூன் 13,2024 அன்று நள்ளிரவில் தாக்கப்பட்டது. இந்த சம்பவம் வடக்கில் ஊடகவியலாளர்களுக்கு எதிரான திட்டமிட்டு குறிவைக்கப்படும் இரகசிய மற்றும் தொடர்ச்சியான வன்முறை வடிவத்தின் ஒரு பகுதியாகும்.
இது மனித உரிமை மீறல்கள் மற்றும் பிற முக்கியமான பிரச்சினைகள் குறித்து வெளியுலகிற்கு தெரியப்படுத்துதல், மற்றும் குரலற்றவர்களின் குரலாக ஒலிப்பவர்களை திட்டமிட்டு அடக்குவதை நோக்கமாகக் கொண்டது.
பொய்யான பொலிஸ் வழக்குகள்
அண்மையகாலங்களில் வட இலங்கையில் ஊடகவியலாளர்கள் மீது மிரட்டும் நோக்கம் கொண்டு அவர்களைக் கட்டுப்படுத்தும் வகையில் பொலிஸாரினால் பொய் வழக்குகள் பதிவு செய்யதல் மற்றும் நீதிமன்ற தடை உத்தரவுகள் பிறப்பித்தல் என்பன அதிகரித்துள்ளன. இந்த பொய் வழக்குகளை எதிர்கொள்வதற்கு ஊடகவியலாளர்கள் சிரமப்படுகிறார்கள். இதற்காக அடிக்கடி நீண்ட சட்டப் போராட்டங்களை நடத்த வேண்டியுள்ளது. நிதி நெருக்கடி மற்றும் சம்பந்தப்பட்ட பத்திரிகையாளர்களுக்கு மன அழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள்.
பொலிஸ் அச்சுறுத்தல்கள் மற்றும் கட்டுப்பாடுகள்
ஊடகவியலாளர்கள், பொலிஸ் அதிகாரிகளின் அச்சுறுத்தல்களையும் விசாரணை என்ற போர்வையில் துன்புறுத்தல்களையும் நேரடியாகவும் மறைமுகமாகவும் எதிர்கொண்டுள்ளனர்.
இதில் அரசாங்க செயல்பாடுகள் குறித்து அறிக்கையிடுவதைத் தடை செய்வது உட்பட. இந்த வேண்டுமென்றே ஊடக வெளிப்பாட்டு நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிப்பதால், ஊடகவியலாளர்கள் தங்கள் கடமைகளைச் செய்ய முடியாது கடுமையான தடைகள் ஏற்படுத்தப்படுகின்றன.
இனந்தெரியாத ஆயுதக் குழுக்களால் அச்சுறுத்தல்
ஊடகவியலாளர்கள் அடையாளம் தெரியாத நபர்களிடமிருந்து அடிக்கடி அச்சுறுத்தல்களைப் பெறுகிறார்கள், இது ஒரு பரவலான பயம் மற்றும் ஜனநாயக நிச்சயமற்ற சூழலை உருவாக்குகிறது.
இந்த அச்சுறுத்தல்களில் பெரும்பாலும் உயிருக்கு அச்சுறுத்தல்கள் மற்றும் அவர்கள் தொடர்ந்து பொலிஸில் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாமை, ஊடகவியலாளர்கள் மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்ற எச்சரிக்கையையே சுட்டிக்காட்டுகிறது.
சமூக ஊடகங்கள் மூலம் அவதூறு
இனந்தெரியாத நபர்கள் மூலம் சமூக ஊடக தளங்களில் ஒருங்கிணைந்த தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுவதோடு அதனை நேரடித் தாக்குதலுக்கான விடயப்பொருளாக காண்பிக்க விளைவித்தல் போன்ற இரகசிய வேலைத்திட்டங்களையும் வட இலங்கையில் இனங்காண முடியும்.
இது ஊடகவியலாளர்ளை அவதூறு மற்றும் மதிப்பிழக்கச் செய்யப்படுவதனூடாக அவர்களின் ஜனநாகப்பணியை செய்யவிடாது தடுத்தலாகும் இந்த பிரச்சாரங்கள் அவர்களின் நற்பெயருக்கு களங்கம் மற்றும் அவர்களின் நம்பகத்தன்மையை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதனூடாக அவர்கள் பணிசெய்யவிடாது தடுத்தலாகும்.
இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால் கண்காணிப்பு மற்றும் அச்சுறுத்தல்
வடக்கு பிராந்தியத்தில் இராணுவ வீரர்களின் இருப்பு மற்றும் செல்வாக்கு அச்சுறுத்தல் மற்றும் அச்சத்தின் சூழலுக்கு பங்களித்துள்ளது. ஊடகவியலாளர்கள் இராணுவ உளவுத்துறையால் பின்தொடர்ந்து கண்காணிக்கப்படுவது அண்மைக்காலங்களில் வடக்கில் அதிகரித்திருப்பதை அவதானிக்க முடிகிறது.
இது அவர்களின் பாதுகாப்பின்மை உணர்வை அதிகரிக்கிறது மற்றும் சுதந்திரமாக அறிக்கை செய்யும் திறனைத் தடுக்கிறது.
சட்டம் மற்றும் ஒழுங்கின் தோல்வி
முழுமையான விசாரணைகள் இல்லாதது மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்காதது சட்டம் மற்றும் ஒழுங்கில் பலவீனத்தையும் தோல்வியையுமே காட்டுகிறது. ஊடகவியலாளர்களைப் பாதுகாப்பதற்கும், குற்றவாளிகளுக்கு தண்டயையளித்தல், பொறுப்புக் கூறுவதற்கும் அதிகாரிகளின் இயலாமை அல்லது விருப்பமின்மை, குற்றம் செய்தவர்களை ஊக்குவிப்பதாகவுமே அமையும்.
தொடர் அவதானிப்பில் வட இலங்கையில் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதலாளிகள், தண்டனையிலிருந்து தப்பிப்பதற்கான வழிகளை ஏற்படுத்துவதை அவதனிக்கலாம். இது வட இலங்கையில் தொடர்ந்து வன்முறைக் கலாச்சாரத்தை வளரப்பதாகவே பார்க்கப்படக்கூடியது.
முடிவாக, ஊடகவியலாளர்கள் மீதான திட்டமிட்ட தாக்குதல்கள், ஊடக சுதந்திரத்தைப் பாதுகாப்பதில் ஜனநாயக அமைப்புகள் தோல்வியடைந்ததையும் இலங்கையில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்திருப்பதையுமே காட்டுகின்றன. இந்த சூழ்நிலையானது ஆரோக்கியமான மக்கள் ஜனநாயகத்திற்கும், அரசின் ஜனநாயகக் கோட்பாடுகளையும் சட்டத்தின் ஆட்சியையும் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது.
கண்டனம்
இலங்கையில் ஊடகவியலாளர்களுக்கு எதிரான வன்முறைகளை பகிரங்கமாக கண்டித்து, அவர்களின் பாதுகாப்பை பாதுகாக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விசாரணை
ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பான சுயாதீன விசாரணைகளை ஆதரித்தல் மற்றும் எளிதாக்குதல், பொறுப்பானவர்கள் பொறுப்புக்கூறப்படுவதை உறுதி செய்தல்.
கண்காணிப்பு மற்றும் அறிக்கையிடல்
இலங்கையில் ஊடகவியலாளர்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்களைக் கண்காணிப்பதற்கான கண்காணிப்புப் பொறிமுறையை நிறுவுதல் மற்றும் சர்வதேச சமூகத்திற்கு தொடர்ந்து அறிக்கையிடுதல்.
ஊடகவியலாளர்களுக்கான ஆதரவு
சட்ட உதவி, பாதுகாப்பான வீடுகள் மற்றும் அவசரகால பாதுக்காப்பு வசதிகள்,
ஜீ.பி.எஸ் வசதிகள் உள்ளிட்ட ஊடகவியலாளர்களைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட
முயற்சிகளுக்கு வளங்களையும் ஆதரவையும் வழங்குதல்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |