வவுனியாவில் கேரள கஞ்சாவுடன் சட்டத்தரணி கைது: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
வவுனியாவில் கஞ்சாவினை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சட்டத்தரணி ஒருவருக்கு10 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
வவுனியா நீதவான் நீதிமன்றில் இன்று (28.02) வழக்கு விசாரணை இடம்பெற்ற போதே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கடந்த 2021 ஆம் ஆண்டு விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து செட்டிகுளம் பகுதியில் வைத்து இளம்சட்டத்தரணி ஒருவரிடம் சோதனை நடத்தப்பட்டது.
வழக்கு தாக்கல்
இதன்போது அவரது உடமையில் கஞ்சா இருந்ததாக தெரிவித்து குறித்த சட்டத்தரணி விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டு செட்டிகுளம் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளின் பின் செட்டிகுளம் பொலிசாரால் வவுனியா நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
குறித்த சட்டத்தரணி விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டு, இது தொடர்பான வழக்கு வவுனியா நீதவான் நீதிமன்றில் இடம்பெற்று வந்தது.
இந்நிலையில் இன்றையதினம் (28.02) அதற்கான தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.
சரீர பிணை
அந்தவகையில், கஞ்சாவினை உடமையில் வைத்திருந்தமை மற்றும் அதனை கொண்டு சென்றமை என்பன தொடர்பாக சட்டத்தரணியை குற்றவாளியாக அடையாளம் கண்ட நீதிமன்றம் அவருக்கு 10 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் விதித்து தீர்ப்பளித்தது.
இதேன்போது, குறித்த சட்டத்தரணி சார்பாக ஆஜராகிய சட்டத்தரணிகள் மேன்முறையீடு தொடர்பான அறிவித்தலை நீதிமன்றில் வழங்கியதன் பிரகாரம் அவருக்கு ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீர பிணை வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த சட்டத்தரணியும் வவுனியா நீதிமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணி என்பதும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |