ஐ.நாவில் இலங்கை தொடர்பில் இந்தியா கூறியது புதிய விடயமல்ல! மிலிந்த மொரகொட
இலங்கையின் பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கான விரைவான நடவடிக்கையாக, முத்தரப்பு ஒத்துழைப்பின் மூலம் நாட்டுக்கு தேவையான முதலீடுகளைப் பெற முடியும் என இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த் மொரகொட தெரிவித்துள்ளார்.
முத்தரப்பு ஒத்துழைப்பு குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஜப்பான் விஜயத்தின் போது இந்தியா, ஜப்பான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பு குறித்து கலந்துரையாடப்பட்டதாக இந்திய ஊடகம் ஒன்றிடம் மிலிந்த மொரகொட கூறியுள்ளார்.
இந்தியாவிற்கான எந்த பாதுகாப்பு அச்சுறுத்தலாக இருந்தாலும் அது இலங்கையின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல். இரு தரப்பு உடன்படிக்கை மற்றும் இருத்தரப்பு புரிந்துணர்வின் அடிப்படையில் இந்தியாவின் நலன்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் விதத்தில் இலங்கையின் துறைமுகங்களை வெளிநாடுகள் பயன்படுத்துவதற்கு இலங்கை அனுமதிக்காது.
கடனில் சிக்கியுள்ள இலங்கையின் பொருளாதார மீட்டெடுப்பதற்கு இந்தியா உதவிகள் முக்கியமானது. இலங்கை இந்தியாவுடன் பொருளாதார ஒருங்கிணைப்பை விரும்புகின்றது.
அது இலங்கை தனது பொருளாதாரத்தை விரிவுபடுத்துவதற்கு ஏதுவாக அமையும் என்பதுடன் இலங்கை கடன் நெருக்கடியிலிருந்து துரிதமாக விடுபடுவதை உறுதி செய்யும். நாங்கள் இந்தியாவுடன் செல்ல முடிந்தால் நீங்கள் நகரும்போது நாங்களும் நகரலாம். இந்தியாவுடன் பொருளாதார ஒருங்கிணைப்பு சாத்தியமானவுடன் புவிசார் அரசியல் விவகாரங்களிற்கு தீர்வை காணமுடியும் என நம்புகிறேன்.
இந்தியாவின் பாதுகாப்பு எது ஆபத்தோ அது இலங்கைக்கும் ஆபத்து
எனினும் அதுவரை நாங்கள் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவேண்டும்,சிவப்புகோட்டை கடந்து செல்லாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக புரிந்துணர்வை ஏற்படுத்த வேண்டும். இலங்கையின் பாதுகாப்பு கவலைகளும் இதனடிப்படையில் உள்ளன.
இந்தியாவின் பாதுகாப்புக்கு எது ஆபத்தாக இருக்குமோ அது இலங்கைக்கும் ஆபத்து என நாங்கள் நம்புகின்றோம் இந்தியாவும் அவ்வாறே எண்ணுகிறது என நாங்கள் கருதுகின்றோம்.
சர்வதேச நாணயநிதியத்தின் நிதி உதவிமிகப்பெரியதாக இல்லாவிட்டாலும் பொருளாதார ஈடுபாடு குறித்து அதனிடமிருந்து கிடைக்ககூடிய பாராட்டு முக்கியமானது. அந்த பாராட்டு முதலீட்டை ஊக்குவிக்கும்.
புவிசார் அரசியல் அனைத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது
கடன்மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளை இந்தியா சீனா போட்டி பாதித்துள்ளது என நான் கருதவில்லை. எனினும் எமது பிராந்தியத்தில் அரசியல் ஆபத்தான கட்டத்தை அடைந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். இது புவிசார் அரசியல் எங்களின் நடவடிக்கைகள் அனைத்திலும் தாக்கத்தை செலுத்துகின்றது என்பதில் சந்தேகமில்லை.
அதேவேளை இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தின் 13 வது திருத்தத்தின் கீழ் தமிழ் மக்களின் விவகாரங்களிற்கு தீர்வை காண்பதற்காக போதிய நடவடிக்கைகளை இலங்கை எடுக்கவில்லை என இந்தியா மனித உரிமை பேரவையில் தெரிவித்துள்ளது. எனினும் இது புதிய விடயமில்ல.
தெரிவித்துள்ள விடயத்தின் நுணுக்கம் மாறியிருக்கலாம் ஆனால் இந்தியா அதன் சாரம்சத்தில் நிலையாக உள்ளது. அரசியல் ரீதியில் இலங்கை மாறும் கட்டத்தில் உள்ளது நாட்டில் சமூக மற்றும் அரசியல் ஒப்பந்தங்களை மீள் பரிசீலனை செய்யவேண்டிய தேவையுள்ளது.
இலங்கை பல மதங்கள் சமூகங்களை கொண்ட குழப்பமான நாடு 13 வது திருத்தமும் அந்த வகைக்குள் வருகின்றது. நாங்கள் புதிய ஒன்றை உருவாக்கவேண்டும் எனவும் மிலிந்த மொரகொட மேலும் தெரிவித்துள்ளார்.