இலங்கை அடிப்படை சுதந்திரத்திற்கு மதிப்பளிக்க வேண்டும் - பிரித்தானியா
இலங்கை மக்களுக்கு உதவிகளை வழங்க அர்ப்பணிப்புடன் இருப்பதாக கூறியுள்ள பிரித்தானியா, இலங்கைக்குள் பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்ல ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை மேற்கொள்ளும் முயற்சிகளை மிகவும் வரவேற்பதாக கூறியுள்ளது.
இலங்கையிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
திங்கள் கிழமை ஜெனிவா மனித உரிமையின் 51 வது கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பான உரையாடல்களுக்கு மத்தியில் உரையாற்றிய பிரித்தானியாவின் ஐக்கிய நாடுகளுக்கான தூதுவர் மிச்சேல் டெய்லர்,அமைதியான ஒன்றுக்கூடல், பேச்சுரிமை உட்ப மனித உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரத்திற்கு மதிப்பளிக்குமாறு இலங்கையிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கை மக்கள் ஜனநாயகத்தை வலுப்படுத்த மேற்கொள்ளும் முயற்சியின் போது அவர்களுக்கு உதவ பிரித்தானியா அர்ப்பணிப்புடன் உள்ளது.
இலங்கை எதிர்நோக்கியுள்ள ஆழமான பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் சவால்களை நாங்கள் அடையாளம் காணும் அதேவேளை மறுசீரமைப்புக்காக அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சியை நாங்கள் வரவேற்கின்றோம்.
சட்டத்தின் இறையாண்மை, நீதிக்கான சம வாய்ப்புகள்,சுதந்திரமான நிறுவனங்கள்,வெளிப்படைத்தன்மை என்பன பொறுப்புக்கூறும் ஜனநாயக கட்டமைப்புகளின் தூண்கள்.
அமைதியாக ஒன்றுக்கூடுவது, பேச்சுரிமை உட்பட மனித உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரங்களுக்கு மதிப்பளிக்குமாறு நாங்கள் கோரிக்கை விடுக்கின்றோம்.
சட்ட இறையாண்மைக்கு உட்பட்டு எதிர்ப்புகள் அதனுடன் சம்பந்தப்பட்ட வன்முறைகள் தொடர்பில் பொறுப்புக்கூறல் மற்றும் நீதிக்கான சமத்துவத்தை கோருகிறோம்.
நல்லிணக்கம் உள்ளிட்ட செயற்பாடுகளுக்கு பிரித்தானிய தொடர்ந்தும் உதவும்
நீதியான வழக்கு விசாரணைகளின் உறுதிப்பாடு மற்றும் ஏனைய சம்பந்தப்பட்ட சட்ட பாதுகாப்புகளை பாதுகாப்பதற்காக பயங்கரவாத தடுப்புச் சட்டமானது சர்வதேச மனித உரிமைகள் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றுடன் சம்பந்தப்பட்டிருப்பது அத்தியவசியம்.
முன்னேறிய மனித உரிமைகளுக்காக பிரதான நடவடிக்கையாக இலங்கைக்குள் நீண்டகாலமாக இருந்து வரும் தண்டனைகளில் தப்பிப்பது மற்றும் ஊழலுக்கு தீர்வு காண்பது முக்கியமானது.
நாங்கள் இலங்கையின் நீதி, பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு தொடர்ந்தும் உதவிகளை வழங்குவோம் எனவும் மிச்சேல் டெய்லர் மேலும் தெரிவித்துள்ளார்.