தமிழர் தாயக ஆக்கிரமிப்பை பிரித்தானிய ஆளும் கட்சியிடம் முறையிட்ட முக்கிய பிரமுகர்கள்(Photos)
தமிழர் தாயகப்பகுதிகளில் சிங்கள அரசினால் முன்னெடுக்கப்படும் காணி அபகரிப்புகளை தடுத்து நிறுத்துவதுடன் அபகரிக்கப்பட்ட காணிகளை மீளப்பெற்றுக்கொடுக்க நடவடிக்கையெடுக்கவேண்டும் என பிரித்தானிய அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
அண்மையில் பிரித்தானியாவுக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள சிவகுரு ஆதீன முதல்வரும் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான மக்கள் இயக்கத்தின் இணைப்பாளர்களில் ஒருவருமான தவத்திரு வேலன் சுவாமிகள் மற்றும் திருகோணமலை மறை மாவட்ட ஆயர் அதிவண. நோயல் இமானுவேல் ஆண்டகை வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் பல்வேறு தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இராஜதந்திர மட்டத்தில் நடைபெற்ற சந்திப்பு
இராஜதந்திர மட்டத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் பிரித்தானிய ஆளும் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரும் பிரித்தானிய பிரதமரின் மதம் மற்றும் நம்பிக்கை சுதந்திரத்திற்கான சிறப்பு தூதுவருமாகிய பியோனா புரூஸ், பிரித்தானிய எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழர்களுக்கான அனைத்து நாடாளுமன்ற குழுவினுடைய உபதலைவருமாகிய ஷயோவான் வெயிலி, பிரித்தானிய லிபரல் கட்சியின் தலைவர் ஸேர் எட் டேவி ஆகியோரை சந்தித்து ஈழத்தமிழர்களின் அரசியல் விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதன்போது இன்று தமிழர் தாயகப்பகுதியில் தமிழர்கள் எதிர்கொண்டுவரும் மிக முக்கிய சவாலான நில அபகரிப்பு தொடர்பில் முழுமையான தெளிவுபடுத்தல்கள் பிரித்தானிய பிரதிநிதிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை நில அபகரிப்புகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்பதுடன் சர்வதேச சமூகம் என்ற அடிப்படையில் பிரித்தானிய அரசாங்கம் இலங்கைக்கு அழுத்தங்களை கொடுத்து நில அபகரிப்பினை தடுத்து நிறுத்துவதற்கும் அபகரிக்கப்பட்ட நிலங்களை உரியவர்களிடம் கையளிப்பதற்கும் உதவ வேண்டும் என்ற வேண்டுகோள் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் முன்வைக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமன்றி ஈழத்தமிழர்களின் நிரந்தர அரசியல் தீர்வாக சர்வதேசத்தின் கண்காணிப்பில் நடத்தப்படுகின்ற ஒரு பொதுசன வாக்கெடுப்பின் அடிப்படையிலேயே எங்களது தலைவிதியை நாங்களே தீர்மானிக்க விரும்புகின்றோம் என்பதை ஈழத்தமிழர்களின் சார்பில் கலந்துகொண்ட பிரதிநிதிகளினால் முன்வைக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியா உள்ளிட்ட சர்வதேச சமூகத்தின் ஆதரவு
இதனை செய்வதற்கு பிரித்தானியா உள்ளிட்ட சர்வதேச சமூகத்தின் ஆதரவும் ஒத்துழைப்பும் தேவையென்பது இதன்போது வலியுறுத்தப்பட்டதாக இந்த சந்திப்பில் கலந்துகொண்ட பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
பிரித்தானிய அரசியல் உயர்மட்டங்களுடனான இந்த சந்திப்புகள் ஈழத்தமிழர்களுக்கான இன்றைய நிலைமையினை சர்வதேசத்திற்கு எடுத்துச்சொல்வதற்கும் களநிலைமையினை மிக தெளிவாக பிரித்தானிய பிரதிநிதிகளுக்கு எடுத்துச் சொல்வதற்கும் வாய்ப்பாக அமைந்துள்ளன.
இதேபோன்று பிரித்தானியாவின் வெளிவிவகார பொதுநலவாய மற்றும் அபிவிருத்திக்கான அலுவலகத்தின் உதவி பணிப்பாளரையும் சந்தித்து இதே விடயங்களை கலந்துரையாடியதாகவும் பேச்சுவார்த்தைகளில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
