வழமைக்கு திரும்பும் நுரைச்சோலை அனல்மின் நிலைய செயற்பாடுகள்:மின்வெட்டு நேரம் குறைக்கப்படலாம்!
நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் திடீரென செயலிழந்த முதலாம் மின் பிறப்பாக்கியை எதிர்வரும் திங்கட்கிழமை (29) முதல் தேசிய மின் கட்டமைப்பில் இணைத்துகொள்ள முடியும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
இதன்படி, 300 மெகாவோட்ஸ் மின்சாரம் தேசிய மின் கட்டமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும் என அதன் ஊடக பேச்சாளர் அண்ட்ரூ நவமணி தெரிவித்துள்ளார்.
மின்வெட்டு நேரம் குறைக்கப்படலாம்
கடந்த 15 ஆம் திகதி நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் முதலாம் தொகுதி திடீரென செயலிழந்தது. அத்துடன் இரண்டாம் தொகுதியின் தொழிற்பாடுகளும் இடைநிறுத்தப்பட்டிருந்தது.
இதன் காரணமாக, நாட்டில் தினசரி 3 மணிநேரம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தபட்டு வருகின்றது.
இந்நிலையில் நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் செயற்பாடுகள் மீண்டும் வழமைக்கு திரும்பிய பின்னர் மின்வெட்டு நேரம் குறைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.