நீதிமன்ற கட்டளையும் குருந்தூர் மலை விவகாரமும்: நடப்பது என்ன! (Photos)
இலங்கைத் தீவு சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்து இந்த நாட்டில் தமிழ் தேசிய இனம் தனது இருப்புக்காக தொடர்ந்து போராடி வருகின்றது.
இந்த நாட்டில் வாழும் சிங்கள மக்களைப் போல் தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்பவற்றை கொண்ட ஒரு தேச அங்கீகாரத்திற்குரிய மக்களாக தமிழ் மக்களும் உள்ளார்கள் என்பதை மிதவாத தலமைகள் தென்னிலங்கை ஆட்சியாளர்களுக்கு வலியுறுத்தி வந்த போதும் அதனை அவர்கள் ஏற்கவில்லை.
தமிழ் மக்கள் மீதான இன ஒடுக்குமுறையும், தமிழ் மக்களின் நிலங்களை அபகரிக்கும் செயற்பாடும், இனசுத்திகரிப்பும் இந்த நாட்டிலே தொடர்ந்து அரங்கேறியதால் தம்மை பாதுகாத்து கொள்ளவும், தமது இனத்தின் இருப்பை பாதுகாக்கவும் இளைஞர், யுவதிகள் ஆயுதமேந்திப் போராட வேண்டிய ஒரு துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டிருந்தது.
30 வருட யுத்தம் இந்த நாட்டை அழிவுப் பாதைக்கு கொண்டு சென்றிருந்தது. இன்று மீள முடியாது தவிக்கும் பொருளாதார நெருக்கடிக்கு யுத்தமும் ஒரு காரணம் என்பதை மறுத்து விட முடியாது.
ஆனால், யுத்தம் முடிந்து 14 ஆண்டுகள் கடந்த பின்னரும், தமிழ் மக்களின் நிலங்களையும், அவர்களது கலாசார பண்பாடுகளையும், அவர்களின் தேச அங்கீகாரத்தையும் சிதைக்கின்ற அல்லது அழிக்கின்ற செயற்பாடுகளே தொடந்தும் ஆட்சியாளர்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு அங்கமாகவே குருந்தூர் மலை விவகாரத்தையும் பார்க்க வேண்டியுள்ளது.
குருந்தூர் மலையும் மத அடையாளமும்
தமிழ் மக்கள் பூர்வீக வாழும் மாவட்டங்களில் ஒன்றான முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தண்ணிமுறிப்பு குளத்திற்கு வட பகுதியில் அமைந்துள்ள மலையே குருந்தூர் மலை அல்லது குருந்தனூர் மலை ஆகும்.
இப் பிரதேசத்தில் 200 ஏக்கர் நிலப்பரப்பில் முன்னைய கால தொல்பொருட் சின்னங்கள் காணப்பட்டன. இப் பகுதியில் ஆதி ஐயனார் (சிவன்) ஆலயம் இருந்ததாக அப் பகுதி வாழ் தமிழ் மக்கள் பொங்கல் செய்தும், படையலிட்டும் வழிபட்டு வந்தனர்.
இவ்வாறு நீண்டகாலமாக அம் மக்கள் வழிபாடுகளை மேற்கொண்டு வந்த நிலையில் திடீரென அப்பகுதிகக்கு வந்த பௌத்த பிக்குகள் சிலர் அவ்விடத்தை பார்வையிட்டதுடன், அங்கு பௌத்த ஆலயமே இருந்தது எனக் கூறி இந்து ஆலயத்தை அகற்றி பௌத்த விகாரை ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டனர்.
இதுவே இங்கு குழப்ப நிலை ஏற்படுவதற்கு காரணமாகியது. இலங்கையின் வரலாறு தொடர்பான தகவல்களையும், பொக்கிசங்களையும் பாதுகாக்க வேண்டிய தொல்பொருள் திணைக்களமும், இந்த நாட்டுக்கும்- மக்களுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டிய படைத்தரப்பும் பிக்குகளுடன் இணைந்து பௌத்த சின்னங்களையும், புத்தர் சிலைகளையும் தமிழர் தாயகப் பகுதிகளில் நிறுவும் நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றனர் என்ற குற்றச்சாட்டு தமிழ் மக்கள் மத்தியில் உள்ளது.
அதன் ஒரு கட்டமாகவே குருந்தூர் மலையிலும் தொல்பொருள் திணைக்களம் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளதுடன், அஙகு பௌத்தம் தான் இருந்ததை என்பதை படைத்தரப்பின் உதவியுடன் வெளிப்படுத்த முயல்கின்றது.
குறித்த பகுதியில் உள்ள மலையின் உச்சியில் ஆய்வுகளை மேற்கொண்ட போது அங்கு எட்டு வரிகளை கொண்ட ஒரு உருளை வடிவ தொலைப்பொருள் சின்னம் கண்டு பிடிக்கப்பட்டது.
அதனை புராதன காலத்தில் பௌத்த விகாரைகளின் உச்சியில் அமைக்கப்பட்ட யூப்ப கல அல்லது யூப்ப ஸ்தம்பம் என பௌத்த பிக்குளும், சில ஆய்வாளர்களும் கூறி அதனை பௌத்த இடமாக காட்ட முயல்கின்றனர்.
பிரித்தானியர் கால வரலாற்று ஆய்வுகள்
இலங்கையில் பிரித்தானியர் நிலை கொண்டிருந்த போது பல்வேறு பகுதிகளில் அவர்கள் ஆய்வுகளை மேற்கொண்டிருந்தார்கள். அதன் மூலம் தமது நூல்களிலும், குறிப்புக்களிலும் இலங்கைத்தீவு தொடர்பான பல தகவல்களை அவர்கள் குறிப்பிட்டும் உள்ளார்கள்.
1905 ஆம் ஆண்டு எச்.சீ.பீ.பெல் என்னும் ஆய்வாளர் குருந்தூர் மலையில் மிகப் பெரிய ஆவுடையார் (லிங்கத்தின் அடிப்பாகம்) இருந்ததாகவும், அதனருகில் கை கூப்பியவாறு ஒருவர் அமர்ந்திருப்பதை போன்ற சிலை, உடைந்த நந்தி சிலை, செங்கல்லால்லான பழங்கால கிணறு ஒன்று இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதில் ஆவுடையார் 3 அடி அகலமும், 3.3 அடி நீளமும் கொண்ட சதுர வடிவுடையது. இதன் நடுப்பகுதியில் 1.1 அடி விட்டமுடைய குழி உள்ளது. இதுவே வட்ட வடிவமான லிங்கம் இருந்த பகுதியாகும். இவை யாவும் சிவ வழிபாட்டுத் தலத்தின் எச்சங்கள் என குறிப்பிட்டுள்ள அதேவேளை, அங்கே ஒரு தூபியின் அடையாளம் இருந்ததால் பௌத்த வழிபாடும் இருந்திருக்கிறது என்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழர் நிலம்
குருந்தூர் மலையைச் சுற்றியுள்ள பகுதிகள் முற்று முழுதாகவே தமிழ் கிராமங்களே. தண்ணிமுறிப்பு, குமுழமுனை, கோடலிக்கல்லு, தண்டுவான், ஆறுமுகத்தான் குளம், ஒதியமலை என்பன அத்தகைய சில கிராமங்களாகும்.
அங்கு காலம் காலமாக தமிழ் மக்களே வாழ்ந்து வருகின்றனர். குறித்த மலையைச் சுற்றி ஏறத்தாழ 2500 ஏக்கருக்கு மேற்பட்ட தமிழ் மக்களது விவசாய நிலங்களும் உள்ளன.
நீர்ப்பாசனத்தை அடிப்படையாக கொண்ட விவசாய நிலங்களும், அவ் நீர்ப்பாசன குளங்களில் மீன்பிடியும் அக் கிராம மக்களின் வாழ்வியலுடன் இணைந்துள்ளன.
அப்படி இருக்கையில், சிங்கள மக்கள் வாழாத அப் பகுதியில் உள்ள மலையில் சிங்கள மக்கள் தான் வழிபட்டார்கள் என்பதை எவ்வாறு ஏற்க முடியும்? இது ஒரு புறமிருக்க, இலங்கைத்தீவில் தேவநம்பிய தீசன் மன்னன் காலத்தில் பௌத்த சமயம் கொண்டவரப்பட்ட போது அரசனைத் தொடர்ந்து அமைச்சர்கள், பிரபுக்கள், மக்கள் எனப் பலரும் பௌத்த சமயத்தை தழுவி அதனை பின்பற்ற தலைப்பட்டனர்.
அதன்போது இங்கு வாழ்ந்த தமிழ் மக்களும் பௌத்த சமயத்தைப் பின்பற்றியிருந்தனர். அவ்வாறெனில் குருந்தூர் மலை சிங்களவர்களுக்கான இடமும் அல்ல. வழிபாட்டு தளமும் இல்லை. அங்கு பௌத்த அடையாளம் இருப்பின் அது தமிழ் பேசும் பெளத்தர்களால் பராமரிக்கப்பட்ட ஒரு இடமாக இருந்திருக்க வேண்டும். குருந்தூர்மலையில் கண்டுபிடிக்கப்பட்ட உருளை வடிவ சிலையானது பல்லவர் கால கலைப்பாணியைக் கொண்ட எட்டுப்பட்டை தாராலிங்கம் என வராலாற்று ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். இது போன்ற பல தாராலிங்கங்கள் தமிழகத்திலும் காணப்படுகின்றன. அத்துடன் தாராலிங்கமானது பல்லவர் காலத்திற்கு முற்பட்ட நாகர் கால லிங்க வடிவம் என பேராசிரியர் எஸ்.பத்மநாதன் அவர்கள் சுட்டிகாட்டியுள்ளார்.
நீதிமன்ற கட்டளையும் கண்டு கொள்ளாத பொலிஸாரும்
இந்நிலையில் தமிழ் மக்களது அடையாளத்தையும், கலாசார பண்பாட்டையும் வெளிப்படுத்தும் ஆதி ஐயனார் (சிவன்) வழிபாட்டு நடவடிக்கைக்கு பௌத்த பிக்குகள் குழப்பத்தை ஏற்படுத்தி, வழிபாட்டு விக்கிரகங்களை அகற்றிய நிலையில் குறித்த விவகாரம் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
கடந்த வருடம் ஜூலை மாதம் 19ஆம் திகதி முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் குருந்தூர் மலையில் மேற்கொள்ளப்படும் பௌத்த கட்டுமானங்களை தொடர்ந்து முன்னெடுக்க முடியாது எனவும், 12.06.2022 அன்றைய நாளில் கட்டுமானம் எந்த நிலையில் காணப்பட்டதோ, அதே நிலையை தொடர்ந்தும் பேணுமாறும் கட்டளையை பிறப்பித்திருந்தது.
ஆனாலும் நீதிமன்ற உத்தரவை மீறி குறித்த விகாரைக் கட்டுமானம் அவசர அவசரமாக நிறைவடைந்துள்ளது. ஜனநாயக நாட்டில் சட்டமும் நீதியும் அனைத்து தரப்பினருக்கும் சமனாக இருக்க வேண்டும்.
ஆனால் இங்கு நீதிமன்றங்கள் கட்டளைகளைப் பிறப்பித்த போதும் அதனை கண்காணித்து நீதிமன்ற கட்டளையை அல்லது உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டிய பொலிஸார் உள்ளிட்ட பாதுகாப்பு தரப்பினர் நீதிமன்ற கட்டளையை உதாசீனம் செய்துள்ளனர்.
குறித்த விகாரை கட்டுமானம் நிறைவடைந்து விட்டதாக அங்கு சென்ற மக்கள் பிரதிநிதிகள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் வெளிப்படுத்திய போதும் உரிய நடவடிக்கை எடுக்க தவறியுள்ளனர். அப்படியெனில் இந்த நாட்டின் சட்டவாட்சி என்பது ஒரு இனத்திற்கு எதிரானதா என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது.
குறித்த மலை தொடர்பான வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில் ஆலய நிர்வாகத்தினர் சார்பாக முல்லைத்தீவு நீதிமன்றில் வழக்கினை மீள விசாரணைக்கு எடுத்த நிர்வாகத்தினர், நீதிமன்ற கட்டளைகள் மீறி கட்டுமாணப்பணிகள் நிறைவடைந்துள்ளதாக மன்றின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.
குறித்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்திய மன்று, எதிர்வரும் 30 ஆம் திகதி இது தொடர்பில் பொலிஸாரை அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதன் பின்னரே அடுத்த கட்டம் குறித்து பேச முடியும். சிங்கள பௌத்த மேலாண்மை வாத அடக்கு முறை சிந்தனையில் இருந்து தென்னிலங்கை ஆட்சியாளர்களும், அரசின் ஆக்கிரப்பு முகவர்களாக செயற்படும் தொல்பொருள் திணைக்களம், வனஇலாகா திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம், மகாவலி அபிவிருத்தி அதிகார சபை போன்ற அரச திணைக்களங்களும், படைத்தரப்பும் மாறாத வரை இந்த நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது.
அகிம்சையை போதித்த பௌத்தத்தின் பெயரால் அடக்கு முறைகளும், கலவரங்களும் நடைபெறும் வரை இந்த நாட்டை பொருளாதார ரீதியாகவும் கட்டியெழுப்ப முடியாது. பௌத்தம் போதிக்கும் அகிம்சையை முன்னெடுக்க அசோக சக்கரவர்த்தி மகிந்த தேரரை அனுப்பி பௌத்தத்தை இலங்கையில் பரப்பினான்.
ஆனால், இன்று இலங்கையில் பௌத்தம் தன்னிலையில் தடம் மாறி ஆக்கிரமிப்பு அடையாளமாகவும், தமிழ் தேசிய இனத்திற்கு எதிரான அடையாளமாகவும் மாறியுள்ளதாகவே தமிழ் தேசிய இனம் உணர்கிறது. இதனை தென்னிலங்கை புரியாத வரை வீழ்ந்திருக்கும் இந்த நாட்டை மீள கட்டியெழுப்ப முடியாது என்பதே உண்மை.