குறைநிரப்பு மதிப்பீடுகள் தொடர்பில் சண்முகம் குகதாசன் எம்.பி நாடாளுமன்றில் முன்வைத்த முக்கிய பரிந்துரைகள்
எதிர்பாராத அரச கடப்பாடுகள், பேரிடர் சார்ந்த செலவுகள் மற்றும் ஒப்பந்தக் கடன்களைச் சரிசெய்தல் ஆகியன ஆண்டின் இடையில் குறைநிரப்பு ஒதுக்கீடுகளை கோரவைக்கின்றன என நாடாளுமன்ற உறுப்பினர் கதிர்வேலு சண்முகம் குகதாசன் தெரிவித்துள்ளார்.
நேற்று(04.08.2026) நாடாளுமன்றில் ஆற்றிய உரையின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அரசின் நிதி ஆளுமை
நாடாளுமன்றம் மேற்பார்வையை வலுப்படுத்தவும், அரசின் நிதி ஆளுமையில் பொதுமக்களின் நம்பிக்கையைப் பேணவும் அவர் பல முக்கிய பரிந்துரைகளை முன்வைத்துள்ளார்.
அவர் முன்வைத்த பரிந்துரைகளாக, அனைத்து குறைநிரப்பு மதிப்பீடுகளும் அரசியலமைப்புத் தீர்மானங்களும் விவாதத்துக்கு எடுக்கப்படுவதற்கு 14 நாட்களுக்கு முன்னர் விரிவான நிதியியல் அறிக்கைகளோடு பொது நிதி பற்றிய குழுவுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட வேண்டும்.

தேசிய பாதீட்டுத் திணைக்களமானது ஒவ்வொரு குறைநிரப்பு கோரிக்கையோடும் சரியாக ஈடுசெய்யும் சேமிப்புகளை அடையாளம் காட்டும் ‘நிதி நடுநிலைமை அறிக்கையை’ இணைக்க வேண்டும்.
நாடாளுமன்ற வாக்கெடுப்புக்கு முன்னதாக ஒவ்வொரு இடைக்கால நிதித் தீர்மானம் குறித்தும், தேசிய கடன் போக்குகள் மற்றும் பணவீக்கத்தின் மீதான அதன் தாக்கத்தை மாதிரியாகக் கொண்ட, ஒரு சுதந்திரமான, பக்கச் சார்பற்ற பொருண்மிய மதிப்பீட்டை வெளியிடும் பொறுப்பை நாடளுமன்றப் பாதீட்டு அலுவலகத்திடம் ஒப்படைக்க வேண்டும்.
ஒப்புதல் அளிக்கப்பட்ட குறைநிரப்பு ஒதுக்கீடுகளின் வழங்கல் மற்றும் செயல்திறனைக் கண்காணிக்க, பொதுமக்கள் அணுகக்கூடிய வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்யும் மற்றும் தலைமைத் தணிக்கையாளரால் ஒரே நேரத்தில் தணிக்கை செய்ய வழிவகை செய்யும் ஒரு நிகழ்நேர எண்மிய கண்காணிப்பு வலைதளத்தை (Portal) நிதி அமைச்சு நிறுவ வேண்டும் ஆகியவற்றை குறிப்பிட்டுள்ளார்.