டென்மார்க்கிலும் ஆரம்பமானது கருவறையில் தெய்வத் தமிழ் வழிபாடு(Photos)
டென்மார்க் நாட்டில் செந்தமிழ் திருமறையில் கருவறையில் தெய்வத் தமிழ்வழிபாடு ஒலிக்க தமிழ்க்கடவுள் வேல்முருகன் ஆலயக் குடமுழுக்கு நேற்று (22.01.2023) நடைபெற்றுள்ளது.
தெய்வத்தமிழ் சிவக்குருமார்கள் அருள் நல்லாசி வழங்கி செந்தமிழ் ஓதி வழிபாடுகளை நடத்தி வைத்துள்ளனர். நற்செய்கை ஆண்டு (சுபகிருது வருடம்) சுறவத் (தை) திங்கள் 8ம் நாள் ஞாயிற்றுக்கிழமை முக்கோல் (திருவோணம்) விண்மீனும் திருநல் ஓகம் (சித்தயோகமும்) குருவோரையும் பொருந்திவரும் காலை 09.00 மணிமுதல் வழிபாடுகள் ஆரம்பமாகியுள்ளன.
இந்த தெய்வத் தமிழ்த் திருக்குடமுழுக்கு நன்னீராட்டுப் பெருவிழா திருச்சடங்குகள், சுவிற்சர்லாந்து பேர்ன் மற்றும் மர்த்தினி சைவ நெறிக்கூடம் - ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் பூசகர்கள், இங்கிலாந்து கைவீக்கம் உச்சி முருகன் திருக்கோவில் பூசகர்கள், மற்றும் சைவநெறிக்கூடம் அருள்ஞானமிகு ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் மதியுரைஞர் திருநிறை.சிவயோகநாதன் ஐயா முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழில் நடைபெற்ற முன்வழிபாடுகள்
வேழமுகத்துத் திருக்களிடம் திருமுழுக்கு சிறப்புற நடைபெறத் திருவருள் திருவாணை பெறுதல், குருவாணை பெறுதல் வழிபாடுகள் சனிக்கிழமை(21. 01. 2023) மாலை 3 மணிமுதல் நடைபெற்றுள்ளது.
மேலும் அன்றையதினம் நந்திக்கொடி நாட்டல் விழா, கணநாதன் வேள்வி, நெற்கதிர்மணி உறைதல், நிலமகன் (வாஸ்த்து) வேள்வி என்பனவும் வேழமுகத்து நாதனுக்கு ஐம்பெரும் திருமுகவழிபாடும் நடைபெற்றுள்ளது.
இதனைத் தொடர்ந்து ஊர்ச்சாந்தி, உள்நுழை திருப்பலி, ஒன்பான் கோள்கள் திருவேள்வி, நிலமகள்சாந்தி, பெருங்காளிப் பெருஞ்சாந்திவேள்வி, திருநீர் உறைதல், திருப்புனல் நிறுத்தல், ஞாயிறு ஒன்றுதல், திங்கள் ஒன்றுதல், தீக்கடவுள் ஒன்றுதல், பன்வழி அருட்காட்சி காட்டல் என்பனவும் தமிழில் நடைபெற்றது.
திருவுலாப்போதல் நின்றவண்ணம் துதி, சென்றவண்ணம் துதி, தமிழ்மாண்புத்துதி, திருமுறைத்துதி, தமிழ்ச் சாத்திரத் துதி, குருநெறித்துதி, நால்வர் துதி, சிவனடியார் சேக்கிழார் துதி, திருவுலாத்துதி நடைபெற்று அமளி ஏறல், ஆணைபெறல், குருவாணை பெறல், கணநாதன் ஆணைபெறல், மெய்யொன்றல், திண்பூணல் என்பன தொடர்ந்து சிறப்பாக ஆற்றப்பட்டுள்ளது.
தமிழர் வாழும் நாடுகளில் பண்பாட்டு வாழ்வியலும்
வள்ளிக்குறத்தி தெய்வானை உடனாய வேல்முருகன் திருமுகத்திற்கு சிறப்பு வேள்வி செந்தமிழ் திருமறையில் ஆற்றப்பட்டுள்ளது.
ஈழத்தை புலமாகக்கொண்ட தமிழர்கள் பெரும்போர் காலத்தில் தாயகம் விட்டுப் புலம்பெயர்ந்து பல நாடுகளில் வாழ்ந்து வருகின்றோம்.
வாழும் நாடுகளில் நாளும் பண்பாட்டு வாழ்வியலையும் தாய்மொழியையும் அளிக்கும் பெரும் நிறுவனங்களாகவே கோவில்கள் விளங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
பல்லாண்டு உழைப்பில் உருவான ஸ்ரீ வேல்முருகன் ஆலயம் தமது பொதுக்கூட்டத்தில் பொது ஆணை பெற்று தமிழ் வழிபாட்டினை நடைமுறைப்படுத்தி உள்ளது. கருவறையில் தமிழ் ஒலிக்க முருகப்பெருமான் திருச்செவிகள் தமிழ் கேட்டுக் குளிர்வதாக நன்னீராட்டுப் பெருவிழா அமைந்துள்ளது.
வழிபாடு தொடர்பான கருத்துக்கள்
பொதுக்கூட்டத்தில் தமிழ் வழிபாட்டு ஆணைபெற்று தமிழ்க் குடமுழுக்கு ஆற்ற வழிசெய்த நிர்வாகத்தினருக்கும், பொதுச்சபைக்கும், அடியார் - பொதுமக்களுக்கும் சிவருசி.தர்மலிங்கம் சசிக்குமார் தமிழ் வழிபாட்டு மன்றமான சைவநெறிக்கூடத்தின் சார்பாளராக உள்ளம் நிறைந்த நன்றிகளை தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தனது உரையில்,“பல நூறு மக்களின் உழைப்பே அடுத்த இளந்தமிழ் சமூகம் தமது தாய்மொழியையும் தமிழ்ப் பண்பாட்டையும் ஒழுக வழிசெய்யும். இவ்வழியில் டென்மார்க் வேல்முருகன் திருவருள் தமிழ் ஒலிக்க வழிசெய்துள்ளது" என தெரிவித்துள்ளார்.
டென்மார்க் ஸ்ரீ வேல்முருகன் ஆலயத்தின் நிர்வாகத்தின் சார்பில் உரையாற்றிய கனகசபாபதி சக்திதாசன்,
சைவநெறிக்கூடம் முன்னெடுக்கும் தமிழ் வழிபாட்டுப் பணியில் இளந்தமிழர்கள் பூசகர்கள் தொண்டில் இருப்பதையும் கண்ணுற்று மகிழ்வதாகவும், அடுத்த இளந்தமிழ்ச் சமூகத்தினை இணைத்துக்கொண்டு தமிழ் அமைப்புக்கள் பணிசிறக்க வேண்டும் எனும் கருத்தினையும் முன்வைத்துள்ளார்.