கிளிநொச்சியில் இடம்பெற்ற மரம் நடுகை நிகழ்வு
உலக சூழல் பாதுகாப்பு தினத்தினை முன்னிட்டு கரைச்சி பிரதேச செயலகமும் கிளிநொச்சி மேற்கு பிரிவு நீர்ப்பாசன திணைக்களமும் இணைந்து சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்குமான அமைப்பின் உதவியுடன் நடாத்திய மரம் நடுகை நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வானது நேற்று (05) அக்கராயன் குளத்தின் இடதுகரை வாய்க்கால் பகுதியின் ஸ்கந்தபுரம் - கண்ணகைபுரம் பிரதான வீதியில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கரைச்சி பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் பூ.ராஜ்வினோத், கிளி. மேற்கு பிரிவின் நீர்ப்பாசன பொறியியலாளர் ரிஷியந்தன், சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்குமான அமைப்பின் பணிப்பாளர் அருட் தந்தை ரமேஷ், கரைச்சி பிரதேச நிர்வாக கிராம அலுவலர் சந்திரன், அக்கராயன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் பிரிவின் கிராம அலுவலர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர், குடும்பநல உத்தியோகத்தர், கமக்கார அமைப்பின் பிரதிநிதிகள், சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் , பொதுமக்கள் கலந்து கொண்டு மரங்களை நாட்டி வைத்தனர்.