கண்டி தலதாமாளிகை குண்டு தாக்குதல் - 25 ஆண்டுகளுக்கு பின் வெளியான தகவல்
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக புலனாய்வுப் பிரிவினருக்கு முன்கூட்டியே தகவல் கிடைத்திருந்தும் அதனை தடுக்க தவறியமை போலவே கடந்த 1998 ஆம் ஆண்டு ஜனவரி 25 ஆம் திகதி கண்டி தலதாமாளிகை மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்தும் புலனாய்வுப்பிரிவினர் முன்கூட்டியே தகவல் வழங்கிய போதிலும் அதனை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை என தெரியவருகிறது.
பாதுகாப்பான இடத்தில் மறைத்து வைக்கப்பட்ட புத்தரின் புனித தந்தங்கள்
அரசாங்கத்திற்கு இது குறித்து கடிதம் மூலம் அறிவித்தும் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படாத காரணத்தினால், இறுதியில் அஸ்கிரிய மற்றும் மல்வத்து மாநாயக்க தேரர்களுடன் கலந்துரையாடி புத்தரின் புனித தந்தத்தை வேறு ஒரு பாதுகாப்பான இடத்தில் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக முன்னாள் தியவடன நிலமே நெரஞ்சன் விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
புத்தரின் புனித தந்தங்கள் வேறு ஒரு இடத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்ததை அன்று தானும் மாநாயக்க தேரர்கள் மாத்திரமே அறிந்திருந்தாகவும் இதனை முதல் முறையாக ஊடகங்களுக்கு தெரியப்படுத்துவதாகவும் அவர் கூறியுள்ளார்.
முன்னாள் தியவடன நிலமே வெளியிட்டுள்ள இந்த தகவல் குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய மாகாணத்திற்கு பொறுப்பான முன்னாள் அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பிரதிப் பணிப்பாளர், தாக்குதல் குறித்து புலனாய்வுப்பிரிவினர் வழங்கிய தகவல் உண்மை எனக்கூறியுள்ளார்.
விடுதலைப் புலிகளின் தகவல் பரிமாற்றங்களும் அவதானிக்கப்பட்டன
கண்டியில் சுதந்திர தினத்தை கொண்டாட அரசாங்கம் தீர்மானித்திருந்த நிலையில், கண்டியை மையமாக கொண்டு பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என தகவல் கிடைத்துள்ளதால், விசேட பாதுகாப்பு வேலை திட்டத்தை முன்னெடுத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
அந்தானையில் அமைக்கப்பட்டுள்ள சமிக்ஞை கருவிகள் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகளின் தகவல் பரிமாற்றங்கள் அவதானிக்கப்பட்டதுடன் குண்டுகள் நிரப்பபட்ட சுமை ஊர்தி கண்டிக்குள் வந்தமை குறித்து சரியான தகவல்கள் கிடைத்தன.
வெடிப் பொருட்கள் நிரப்பிய சுமை ஊர்தி கண்டி நகருக்கு வந்துள்ளமை குறித்து தகவல் கிடைத்ததை அடுத்து அன்றைய பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சந்திரானந்த டி சில்வாவிடம் அது பற்றி எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டது.
அவரை தவிர மத்திய மாகாணத்திற்கு பொறுப்பான பிரதிப்பொலிஸ் மா அதிபர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோருக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டது.
குண்டு வெடிப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே புலனாய்வுப்பிரிவினர் தகவல் வழங்கி இருந்தனர். எனினும் அரசாங்கம் அது சம்பந்தமாக பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவில்லை என்பது 25 ஆம் திகதி தலதாமாளிகை மீது நடத்தப்பட்ட குண்டு தாக்குதல் மூலம் உறுதியாகியது.
மேலும் பயங்கரவாத தாக்குதலின் பின்னர் பாதுகாப்பு தரப்பினர் செயற்பாடுகளை முன்னெடுக்காது சம்பந்தமாக விசாரணை நடத்தப்பட்டதுடன் மூன்று பேர் அடங்கிய ஆணைக்குழுவும் நியமிக்கப்பட்டது.
எனினும் அந்த ஆணைக்குழுவின் அறிக்கை வெளியிடப்படவில்லை எனவும் அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பிரதிப்பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.