அரச இணையத் தளத்திலிருந்து கல்முனை வடக்கு பிரதேச செயலகம் நீக்கம்: சந்திரநேரு சந்திரகாந்தன் கண்டனம்
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை இல்லாதொழிப்பதற்கான நடவடிக்கையாகவே அரச இணையத் தளத்திலிருந்து இருந்து கல்முனை வடக்கு பிரதேச செயலகம் நீக்கப்பட்டமையாகும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.
தமிழ்தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் இன்று (31) ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
“கல்முனை வடக்கு (தமிழ்பிரிவு) பிரதேச செயலகம் கடந்த 1989ம் ஆண்டு முதல் ஒரு தனியான பிரதேச செயலகமாக 33 வருடங்களாக தொழிற்பட்டு வரும் நிலையில் இச்செயலகத்தினை இல்லாதொழிப்பதற்கான முஸ்தீபுகள் எமது சகோதர இனமான முஸ்லிம் அடிப்படை வாதிகளாலும், அரசியல்வாதிகளாலும் காலத்திற்கு காலம் முன்னெடுக்கப்படுவது வெளிப்படையான விடயம்.
எனவே இந்த நகர்வின் ஓர் அங்கமே அரச இணையத் தளத்திலிருந்து இருந்து கல்முனை வடக்கு பிரதேச செயலகம் நீக்கப்பட்டமையாகும் என சந்திரநேரு சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது,
கல்முனை வடக்கு பிரதேச செயலகம்
“சில முஸ்லிம் அரசியல்வாதிகள் தங்களது வங்குரோத்து அரசியலை தமது சமூகத்துக்குள் தக்கவைத்துக்கொள்வதற்காக கல்முனை வடக்கு பிரதேச செயலக விடயத்தை அடிக்கடி கையிலெடுத்துக்கொண்டு இரு இனங்களுக்கிடையே பிளவினை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள்.
முஸ்லிம் அடிப்படைவாத அரசியல்வாதிகள் 'கல்முனை எம்மிடமிருந்து பறிபோகப்போகிறது' என்ற போலியான வார்த்தைகளை நியாயமாக சிந்திக்கும் போக்குடைய முஸ்லிம்கள் மத்தியில் பரப்பி தமது அரசியல் இருப்பை தக்கவைத்துக்கொள்ளும் ஒரு தளமாக இதனை பயன்படுத்தி வருகின்றனர்.
இணைந்த வடக்கு, கிழக்கு அதில் தமிழ்பேசும் மக்களுக்கான மாகாண அலகு, சிங்கள பேரினவாதத்துடன் இணையாது மாகாணத்தில் தமிழ் முஸ்லிம் மக்களை உள்ளடக்கிய மாகாண சுயாட்சி என பகல் கனவு காணும் தமிழ்தலைமைகள் இவ்விடயத்தில் உறங்கு நிலையில் உள்ளார்கள்.
ஹக்கீம், சம்மந்தன் போன்ற மிதவாதிகள் ஏன் இவ் விடயத்தில் முன்னின்று செயற்பட்டு புரையோடி போயுள்ள இப் பிரச்சினையை மக்களுக்கு தெளிவுபடுத்த தயங்குகின்றனர்.
இத் தயக்கம் 'பட்டு வேட்டி கனவில் இருந்த கல்முனை தமிழ் சமூகத்தினை கோவணமற்ற நிலமைக்கு தள்ளியுள்ளது' கல்முனை தமிழர்கள் மிகவும் பாவம் செய்தவர்கள் என்றே நான் எண்ணுகின்றேன்.
அவர்கள் தங்களது விடிவிற்காக போகாத தூரமில்லை நடத்தாத போராட்டம் இல்லை. இறுதியில் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) கொண்டு வந்தாவது எமது பிரதேச செயலகம் மீதான அநாவசிய அரசியல் தலையீடுகளை தடுப்போம் என்று ஒன்றிணைந்தனர்.
இதிலும் கல்முனை பிரதேச மக்கள் தோல்வியுற்றனர். இவர்கள் எல்லாம் இப்போது எங்கே? தற்போது அம்பாறையில் உள்ள முதுகெலும்பற்ற தமிழ் அரசியல்வாதிகளால் எமது தமிழ் சமூகம் நிர்க்கதியாக்கப்பட்டுள்ளது.
தமிழ் மக்களை இனி கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்
காலத்திற்கு காலம் தமிழ்தேசிய கோஷத்தினை எழுப்பி உசுப்பேற்றி வெறுமனே நாடாளுமன்ற கதிரைகளை சூடேற்றிக் கொண்டிருக்கும் நபர்களை அனுப்புவதனை மக்கள் கைவிட்டு ஓரணியில் திரண்டு செயற்படாவிட்டால் தந்தை செல்வா கூறியதைப்போன்று தமிழ் மக்களை இனி கடவுள்தான் காப்பாற்ற வேண்டி வரும்.
கல்முனை வடக்கு பிரதேச செயலக செயற்பாடுகளுக்கு முட்டுக்கட்டையாக இருப்பவர்கள் யார்? முஸ்லிம் தீவிரவாத போக்குடைய அடிப்படை வாதிகள்தான்.
அப்பாவி முஸ்லிம்கள் அல்ல. எவ்வளவு காலத்திற்கு இவர்களுடன் இணைந்து செல்லப் போகின்றீர்கள்?
கடந்த அரசாங்க காலத்தில் முஸ்லிம்ங்களுக்கு எதிரான முன்னெடுப்புக்கள் தீவிரமடைந்தபோது 'தமிழ் முஸ்லிம் உறவு', 'தமிழ் பேசும் சமூகம் நாம்' என்றெல்லாம் பேசியவர்கள் மீண்டும் தொப்பியை பிரட்டியுள்ளனர்.
மதத்தினை அடிப்படையாகக் கொண்டு பிரச்சாரங்களை முன்னெடுக்கும் போது அச்சமூகத்தில் உள்ள படித்த, பாமர மக்கள் பலிக்காடாவாக்கப்படுகின்றனர்.
கல்முனை வாழ் பூர்வீக தழிழர்கள் இன்று தமது வாழ்விடங்களை நாளுக்கு நாள் இழந்து வருகின்றனர்.
கடந்த நல்லாட்சி காலத்தில் கிடைத்த வாய்ப்புக்களை எல்லாம் நழுவவிட்ட தமிழ் தலைமைகள் இனி ஒன்றையும் சாதிக்கப்போவதில்லை.
அரச அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்
அண்மையில் கல்முனை அனைத்து தமிழ் சிவில் அமைப்புக்களின் ஒன்றியத்தினால் வெளியிடப்பட்ட புத்தகம் ஒன்றினை பார்த்தேன். அதில் 'அரசியல் வாதிகளை நம்பியது போதும், அரச அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என கருணை மனு ஒன்றினை முன்வைத்துள்ளனர். இது எதனை காட்டுகின்றது?
மக்கள் அரசியல் தலைமைகளில் நம்பிக்கை இழந்து விட்டனர். இதனை கண்கெட்டபின் சூரிய நமஸ்காரம் என்பதா? இல்லையேல் எமது தமிழ் சமூகம், அரசியல் பலத்தை சரியாக பாவிக்க தெரியதாததன் வெளிப்பாடா? ஒன்றை மட்டும் சொல்கின்றேன், இப் பிரச்சினை நிர்வாக பிழையாக இருந்தாலும் இதற்குள் அரசியல் உச்ச அளவில் ஓங்கி நிற்கின்றது.
அரசியலை தவிர்த்து இங்கு எந்த இலக்கினையும் அடைய முடியாது. இப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்றால் முஸ்லிம்கள் மத்தியில் உள்ள மதவாத அடிப்படைவாத போக்கற்ற சிவில் சமூகங்கள் முன்வர வேண்டும்.
தமிழ், முஸ்லிம் சிவில் சமூகங்கள் அரசியல் வாதிகளை புறந்தள்ளிவிட்டு ஒரே மேடையில் பேச முன்வரவேண்டும். இதனை முன்னெடுக்க இரு சமூகங்களினதும் புத்தி ஜீவிகள் முன்வர தயாரா?
தமிழ் சிவில் சமூகங்கள் கேட்டுக் கொண்டதற்கு அமைவாக உரிய அரச அதிகாரிகளால் புரையோடிப் போயுள்ள இந்த பிரச்சினையை தீர்த்து வைக்க முடியும் என்பது முட்டாள் தனம்.
எனவே முஸ்லிம் அரசியல் வாதிகளும் சில முஸ்லிம் அடிப்படை வாதிகளும் தமது தனிப்பட்ட தேவைகளுக்காக இப்பிரச்சினையினை கையிலெடுக்கும் நிலமையினை சீராக்க முஸ்லிம் மக்களில் உள்ள தமிழ் முஸ்லிம் மக்களின் ஒற்றுமையை விரும்பும் சிவில் அமைப்புக்கள் தமிழ் சிவில் அமைப்புக்களுடன் பேசுவதற்கு முன்வரவேண்டும்.
இதற்கான களத்தை அமைத்து தர நான் என்றும் தயாராக உள்ளேன். இதனைச் செய்ய சிவில் சமூகங்கள் தயக்கம் காட்டுமாயின் கல்முனை பிராந்தியத்தில் உள்ள தமிழ் முஸ்லிம் இனங்களுக்கிடையில் ஒற்றுமை நல்லுறவு வெகுவாக பாதிப்புறும்.
அத்துடன் இளைஞர்கள் மத்தியில் அடிக்கடி முரண்பாடுகள் தோன்றும். எனவே மூன்று தாசப்தகாலமாக நிலவி வருகின்ற இனங்களுக்கிடையிலான கசப்புணர்வை நீக்கி நல்லுறவை கட்டியெழுப்பி சமாதானமான மகிழ்ச்சியான சூழல் ஒன்றை உருவாக்குவதற்கு முன்மாதிரியான சிவில் அமைப்புக்கள் முன்வரவேண்டுமென நான் அழைப்பு விடுக்கின்றேன்.
அதைவிடுத்து வருடத்தில் ஒரு நாள் கல்முனை நகரத்தில்
பொங்கல் பொங்குவதாலோ, மாதம் முழுவதும் நோன்பு நோற்பதாலோ எந்த சந்தோசத்தினையும்
நீங்கள் உங்கள் எதிர்கால சந்தத்திக்கு வழங்கப்போவதில்லை என சுட்டிக்காட்ட
விரும்புகின்றேன்”என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri
