யுத்த சூழலில் பலவந்தமான முறையில் பிரிக்கப்பட்ட பகுதி! சபையில் கொந்தளித்த எம்.பி
யுத்த சூழ்நிலை காரணமாக அப்போது கல்முனை பிராந்தியத்தில் இருந்த அன்றைய ஆயுத இயக்கங்களின் உறுப்பினர்கள் பல அச்சுறுத்தல்களை மேற்கொண்டு, பலவந்தமான முறையில் கல்முனை உப பிரதேச செயலக உருவாக்கத்தை ஏற்படுத்தியதாக நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று(02) இடம்பெற்ற வங்கி (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கல்முனை உப பிரதேச செயலக உருவாக்கம்
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,தமிழ் தேசியக்கூட்டமைப்பின் எம்.பி.க்கள் அம்பாறை மாவட்டத்தின் கல்முனை வடக்கு பிரதேச செயலக விடயம் தொடர்பாக பல கருத்துக்களை தெரிவித்திருந்தார்கள்.
வடக்கு - கிழக்கில் தமிழ், முஸ்லிம் இனம் அரசியல் தீர்வை, அதிகாரபகிர்வை வேண்டி நிற்கின்றபோது கல்முனை மாநகரத்தில் வெறுமனே ஒரு வட்டாரத்தில் 3500 தமிழ் மக்கள் முஸ்லிம்களோடு இணைந்து வாழ்வதற்கு இடமளிக்காது தமிழ் தலைமைகள் எவ்வாறு வடக்கு - கிழக்கில் தமிழ், முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாக அதிகாரப்பகிர்வை எட்ட முடியும்.
கல்முனை நகரத்தில் கல்முனை பிரதேச செயலகம் ஒன்றும் அதே நேரம் கல்முனை உப பிரதேச செயலகம் ஒன்றும் இயங்கி வருகின்றது.
இந்த உப பிரதேச செயலகம் 1989 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6 ஆம் திகதி பொது நிர்வாக அமைச்சின் ஒரு கடிதத்தின் ஊடாக உருவாக்கப்பட்டது. ஆனால் அது சம்பந்தமாக அந்த நேரத்தில் இருந்த அமைச்சரவை தீர்மானமோ அல்லது வர்த்தமானி பிரகடனமோ அந்த உப பிரதேச செயலகத்திற்கு இருக்கவில்லை.
யுத்த சூழ்நிலை
அன்றிருந்த யுத்த சூழ்நிலை காரணமாக அப்போது கல்முனை பிராந்தியத்தில் இருந்த அன்றைய ஆயுத இயக்கங்களின் உறுப்பினர்கள் பல அச்சுறுத்தல்களை மேற்கொண்டு பலவந்தமான முறையில் இந்த உப பிரதேச செயலக உருவாக்கம் ஏற்படுத்தப்பட்டது.
இருந்தும் தமிழ், முஸ்லிம் ஒற்றுமை காரணமாக அன்றிருந்த முஸ்லிம் அமைச்சரவை அமைச்சர் ,அதேபோன்று பின்னர் வந்த அமைச்சர்கள் எல்லோரும் இதனை பேச்சு வார்த்தை ஊடாக தீர்க்க வேண்டும் என்பதற்காக தமிழ் மக்களுக்கென வேறு எல்லையுடனான ஒரு பிரதேச செயலகமும் முஸ்லிம் மக்களுக்கென ஒரு எல்லையுடனான பிரதேச செயலகமும் உருவாக்கப்பட வேண்டுமென்ற கொள்கை ரீதியான உடன்பாட்டுக்கு வந்திருந்தார்கள் என தெரிவித்துள்ளார்.