கல்முனை வைத்தியசாலை ஆடை விவகாரம் எங்கள் அடிப்படை உரிமையை மீறும் செயலாகும் - கிண்ணியா பிரதேசசபை உறுப்பினர் விசனம்
கல்முனை வைத்தியசாலையில் இடம்பெற்று வரும் ஆடை பிரச்சினையானது ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தின் அடிப்படை உரிமையை மீறும் செயல் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கிண்ணியா பிரதேச சபை உறுப்பினர் எம்.ஏ.அப்துல் ஹாதி தெரிவித்துள்ளார்.
நேற்று (24.08.2026) நடைபெற்ற கிண்ணியா பிரதேச சபை அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
சிறுபான்மை சமூகத்தின் உரிமை
அவர் மேலும் தெரிவிக்கையில், அமைதியான சூழலில் வாழும் சிறுபான்மை சமூகத்தின் உரிமைகளை பறிக்கும் வகையில் வைத்தியசாலை நிர்வாகத்தின் அதிகாரம் படைத்த சில அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை, நாட்டில் சமத்துவத்தையும் ஊழலற்ற நல்லாட்சியையும் ஏற்படுத்துவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கத்தின் வாக்குறுதிகளுக்கு முற்றிலும் முரணானதாக அமைகின்றது.
இலங்கை முஸ்லிம் சமூகம் பழங்காலம் தொட்டே இந்த நாட்டிற்கும் அதன் தலைவர்களுக்கும் என்றும் விசுவாசமாகவே செயற்பட்டு வந்துள்ளது என்பதை வரலாறு சான்றளிக்கின்றது.

போர்த்துக்கேயரின் மதக் கெடுபிடிகளினாலும் இன அழிப்பு நடவடிக்கைகளினாலும் கரையோரப் பகுதி முஸ்லிம் சமூகம் துரத்தப்பட்டபோது, கண்டி மன்னன் இரண்டாம் ராஜசிங்கன் சுமார் 4000க்கும் மேற்பட்ட முஸ்லிம்களை பாதுகாப்பாக மீட்டு கண்டி மற்றும் கிழக்கு மாகாணத்தின் அக்கரைப்பற்று பகுதியில் குடியேற்றி அரவணைத்தான்.
1818ஆம் ஆண்டு பிரித்தானிய ஆட்சிக்கு எதிராக வெடித்த கிளர்ச்சியில் கண்டி மன்னனின் விசுவாசிகளாக சிங்கள மக்களுடன் இணைந்து முஸ்லிம்கள் தியாகங்களை செய்தனர்.
அதேபோல், இலங்கை தேசிய காங்கிரஸில் இணைந்த முஸ்லிம் தலைவர்கள் (டி.பி. ஜாயா போன்றோர்), "இலங்கை எனது நாடு, சிங்கள மக்கள் எனது மக்கள்" என பிரகடனப்படுத்தி, முழு சுதந்திர இயக்கத்திற்கும் நிபந்தனையற்ற ஆதரவை வழங்கினர்.
தேசிய ஒருமைப்பாடு
நாட்டை சூறையாடிய கொடூர யுத்த காலத்திலும், நாட்டின் தனித்துவத்தை பாதுகாக்கவும் "ஒரே இலங்கை" என்ற கொள்கையை நிலைநாட்டவும் கீழ்மட்டம் முதல் உயர் அதிகாரிகள் வரை முஸ்லிம் சமூகம் பாரிய பங்களிப்பை செய்துள்ளது.
இவ்வளவு வரலாற்றுச் சான்றுகளையும் அர்ப்பணிப்புகளையும் கொண்ட ஒரு சமூகத்திற்கு, இன்று ஒரு சாதாரண நிறுவன மட்டத்திலான சுற்றறிக்கையை காரணம் காட்டி, மத சுதந்திரத்தையும் தான் விரும்பிய இடத்தில் தொழில் புரியும் உரிமையையும் மறுப்பது எமது மக்களைப் பாரிய அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

அரசியலமைப்பில் திருத்தங்களை மேற்கொள்வதற்குக்கூட பாரிய அதிகாரத்தை கொண்டிருக்கும் இந்த அரசாங்கம், இந்தச் சிறிய சுற்றறிக்கை சிக்கலை ஒரு சாட்டாக வைத்து இன முரண்பாடுகள் உருவாவதை தடுக்க உடனடியாக தலையிட வேண்டும்.
எனவே, பாதிக்கப்பட்ட ஊழியர்கள் தான் விரும்பிய இடத்தில் தொழில் புரியும் உரிமையையும் மதச் சுதந்திரத்தையும் உடனடியாக உறுதிசெய்வதுடன், இன நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் செயற்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசாங்கத்தை மிகவும் அழுத்தமாக வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 9 Evening